இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் - நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (ICMR - NCDIR) ஆகியவை மேற்கொண்ட ஆய்வில், இந்தியாவில் 18-54 வயதுடைய மக்களில் 10 ல் 3 பேர் தங்களின் ரத்த அழுத்தத்தினை பரிசோதனை செய்வதே இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் International Journal of Public Health-ல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில் தென் இந்தியாவில் 76 சதவீதம் பேர் (குறிப்பாக தமிழ்நாட்டில் 83%, லட்சத்தீவில் 91%,கேரளாவில் 89%, புதுச்சேரியில் 83% பேர்) தங்களின் ரத்த அழுத்தத்தை சராசரியாக பரிசோதனை செய்யும் பழக்கத்துடன் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. அதேநேரம் வட மாநிலங்களில் 70 சதவீதம் பேர் மட்டுமே தங்களின் ரத்த அழுத்தத்தினை வாழ்நாளில் ஒருசில முறைகள் மட்டுமே பரிசோதித்துள்ளனராம்.
அதிலும், மத்திய பிரதேசம் 62.4%,சத்தீஸ்கர் 62%,ராஜஸ்தான் 58%,ஒடிசா 56%, ஜார்கண்ட் 60%, குஜராத் 58%, நாகலாந்து 58% மக்கள் மட்டுமே தங்களின் ரத்த அழுத்தத்தினை ஓரிருமுறை பரிசோதனை செய்கின்றனர் என தெரியவந்துள்ளது.
அதுசரி ரத்த அழுத்தம் எதனால் ஏற்படுகிறது? American Heart Association கூற்றின்படி, இதயத்தின் தமனிகளில் இருக்க வேண்டிய அழுத்தம் வழக்கத்தினை விட அதிகமாகவோ குறைவாகவோ ஆகும்போது உயர் ரத்த அழுத்தமோ, குறைவான ரத்த அழுத்தமோ ஏற்படுகிறது.
இதில் உயர் ரத்த அழுத்தம் என்பது மாரமடைப்பு, பக்கவாதம் மற்றும் நீண்டகால சிறுநீரக செயலிழப்பு போன்ற பல முக்கியமான நோய்களுக்கு முன்னோடியாக உள்ளது. முன்பெல்லாம் 40 வயதிற்கு பிறகுதான் மக்கள் தங்களின் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துவர். ஆனால் தற்போது நிலை அப்படியல்ல. இளம் வயதிலேயே 25 வயதிலேயே மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய் பாதிப்பு ஏற்படுவது அதிகரித்து வருகிறது. ஆகவே, ஆரம்பத்திலேயே பரிசோதனை செய்து கொள்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்.
ரத்தக்குழாய்களில் ஓடும் ரத்தமானது அதன் உள்சுவரின் மீது ஏற்படுத்தும் அழுத்தத்தினையே ரத்த அழுத்தம் என்று கூறுகிறோம்.
ரத்த அழுத்தமானது இயல்பு நிலையை மீறி செயல்படும்போது, உடலில் உள்ள எல்லா பாகங்களுக்கும் ரத்தம் செல்லுவது தடைப்படக்கூடும். அல்லது அது செல்லும் விகிதம் குறையலாம். இது நாள்படும்போது ரத்த அழுத்த குறைபாடாக மாறும்.
ரத்த அழுத்தத்தில் இயல்புநிலை என்பது 120/80. இதில் 120 என்பது சிஸ்டாலிக், 80 என்பது டயஸ்டாலிக். இந்த இயல்புநிலை, வயதைப் பொறுத்து மாறுதலுக்கு உள்ளாகிறது. எடுத்துக்காட்டுக்கு 10 முதல் 19 வயதுக்கு உள்பட்ட இளம் வயதினருக்கு சிஸ்டாலிக் அழுத்தம் 120 முதல் 136 வரையிலும், டயஸ்டாலிக் அழுத்தம் 82 முதல் 86 வரையிலும் இருப்பது இயல்புநிலையாக கருதப்படும். எதுவாகினும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். 6 மாதம் அல்லது வருடம் ஒருமுறை நிச்சயம் உங்கள் ரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்வது நல்லது.