காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ஷா ஃபைசல் கடந்த 2010-ஆம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். அதிகாரியானார். இந்நிலையில் இவர் கடந்த 2019-இல் காஷ்மீர் மக்களின் நலன் கருதி முழு நேர அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக கூறி தமது ஐ.ஏ.எஸ். பணியைத் துறப்பதாக அறிவித்தார். ஜம்மு - காஷ்மீர் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சியை துவக்கிய அவர், கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இருந்து 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தினார். இதனிடையே ஷா ஃபைசலின் ராஜினாமாவை மத்திய அரசு நிராகரித்ததால் அவர் மீண்டும் ஐ.ஏ.எஸ். பணிக்கு திரும்பினார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவ்வாறு மனுத்தாக்கல் செய்தவர்களில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷா ஃபைசலும் ஒருவர் ஆவார். 370-வது சட்டப்பிரிவு ரத்துக்கு எதிரான வழக்குகளை உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்குகளை 7 நீதிபதிகள் கொண்ட மிகப்பெரிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக் கோரி சில தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். ஆனால் இந்த வழக்குகளை 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், 5 நீதிபதிகள் கொண்ட அமர்வே விசாரிக்கும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீரில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வரும் ஜூலை 11-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது. இச்சூழலில் 370-வது சட்டப்பிரிவு ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தனது சார்பில் தொடரப்பட்ட மனுவை முன்பே வாபஸ் பெற்று விட்டதாக ஷா ஃபைசல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி ஷா ஃபைசல், ''என்னைப் போன்ற பல காஷ்மீரிகளுக்கு 370-வது சட்டப்பிரிவு என்பதெல்லாம் கடந்த கால விஷயம். ஜீலம் மற்றும் கங்கை இந்தியப் பெருங்கடலில் இணைந்துள்ளது. எனது இந்த முடிவு, பின்வாங்குவதற்காக அல்ல; முன்னேறுவதற்காக'' என்று குறிப்பிட்டுள்ளார்.