ராஜினாமா ஏற்கப்படும்வரை பணியில் தொடருமாறு, கடந்த வாரம் ராஜினாமா செய்வதாக அறிவித்த ஐஏஎஸ் அதிகாரி, கண்ணன் கோபிநாதனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தாத்ரா - நாகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மின் துறை செயலாளராக பணியாற்றி வருபவர் ஐஏஎஸ் அதிகாரி, கண்ணன் கோபிநாதன். திருச்சூர் அருகே புத்தம்பள்ளியைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு கேரளாவை புரட்டிப் போட்ட வெள்ளத்தின்போது நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். தான் ஐஏஎஸ் அதிகாரி என்ற அடையாளத்தை மறைத்துக் கொண்டு, செங்கண்ணூரில் உள்ள நிவாரண முகாமில் பொருள்களை பிரித்து அனுப்பும் பணிகளில் 8 நாள்களாக இருந்தார். 9 வது நாளில் பிற அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, இந்த தகவல் வெளியுலகத்துக்கு தெரியவந்து பிரபலமடைந்தார். நாடு முழுவதும் அவருக்கு பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில், அவர் தனது ஐ.ஏ.எஸ். பதவியை திடீரென ராஜினாமா செய்தார். சுதந்திரமாக செயல்பட முடியாததாலும் காஷ்மீர் விவகாரம் தொடர்பாகவும் ராஜினாமா செய்ததாகக் கூறிய அவர், அதற்குப் பிறகு பணியை தொடரவில்லை.
இதற்கிடையே, ராஜினாமா ஏற்கப்படும் வரை, பணியில் தொடருமாறு அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான நோட்டீஸ், அவர் தங்கியுள்ள அரசு விருந்தினர் மாளிகையில் ஒட்டப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸில், டையு டாமன் பணியாளர்கள் துறை இணை செயலாளர் குர்பிரீத் சிங் கையெழுத்திட்டுள்ளார்.