வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்ட விமானப்படை வீரர் அபிநந்தன், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார்.
இந்திய விமானப்படை வீரரான அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்டார். இதனையடுத்து, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் இம்ரான் கான், நல்லெண்ண அடிப்படையில் எவ்வித நிபந்தனையுமின்றி அபிநந்தனை விடுவிக்கப்படுவார் என்று நேற்று அறிவித்தார்.
பாகிஸ்தானின் ராவல் பிண்டி ராணுவ முகாமிலிருந்த அபிநந்தன் லாகூருக்கு கொண்டு வரப்பட்டார். பின்னர், அங்கிருந்து, சாலை மார்க்கமாக காரில் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்டார். மாலை 4 மணியளவில் வாகா எல்லைக்கு கொண்டு வரப்பட்டார் அபிநந்தன். ஒப்படைப்பக்கப்படும் போது மேற்கொள்ளப்படும் இருநாட்டு அதிகாரிகளின் நடைமுறைகள் பல மணி நேரம் நடைபெற்றது. அப்போது, போர்க்கைதிகள் தாயகம் திரும்பும் போது மேற்கொள்ளப்படும் பல்வேறு நடைமுறைகள் அப்போது நடைபெற்றன. அபிநந்தனை வரவேற்க ஏராளமான மக்கள் அட்டாரி எல்லையில் காத்திருந்தனர்.
இந்நிலையில், இரவு 9 மணியளவில் அபிநந்தனை இந்திய அதிகாரிகளிடம் பாகிஸ்தான் அதிகாரிகள் ஒப்படைத்தனர். கோட் அணிந்த நிலையில் இந்திய எல்லையான அட்டாரிக்குள் நடந்து வந்தார் அபிநந்தன். விமானப்படை துணை அதிகாரிகள் அவரை எல்லையில் வரவேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படை அதிகாரிகள், “பாகிஸ்தான் வசம் இருந்த விமானி அபிநந்தன் தாயகம் திரும்பியது விமானப்படை மகிழ்ச்சி அடைகிறது. மருத்துவ பரிசோதனைக்காக அவர் அழைத்துச் செல்லப்படுகிறார்” என்று கூறினர்.