இந்திய எல்லைக்குள் அத்துமீறி வந்த பாகிஸ்தானின் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானத்தை இந்திய விமானப்படை சுட்டு வீழ்த்தியது.
ராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டிய இந்திய - பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி ட்ரோன் ஒன்று வருவதை இன்று காலை 11.30 மணிக்கு இந்திய விமானப்படையின் ரேடார் கண்டறிந்தது. உடனடியாக, பினகரிலுள்ள நள் விமானப்படை தளத்திலிருந்து சுகோய்-30 எம்.கே.ஐ விமானங்கள் ட்ரோனை இடைமறிக்க கிளம்பின.
வான்வெளியில் ட்ரோனை நேருக்கு நேராக சந்தித்தது. பின்னர் சுகோய்-30 விமானம் ட்ரோனை சுட்டு வீழ்த்தியது. சுட்டு வீழ்த்தப்பட்ட ட்ரோனின் பாகங்கள் பாகிஸ்தானின் டோபா ஏரிப்பகுதியில் சிதறி வீழ்ந்தன.
இந்தச் சம்பவம் நடந்த உடனே இந்தியா, பாகிஸ்தான் பகுதியில் சர்ஜிகல் ஸ்டிரைக் செய்ததாக் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் கருத்து பதிவிட்டனர். உடைந்த ட்ரோன் பாகங்களின் படங்களையும் பதிவிட்டனர். ஆனால், சர்ஜிகல் ஸ்டிரைக் எதுவும் நடைபெறவில்லை என்று பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியான பால்கோட்டில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. அதனையடுத்து, இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானங்கள் விரட்டி அடித்தன. அந்த முயற்சியின் போது, விங் கமாண்டர் பாகிஸ்தானிடம் சிக்கி மூன்று நாட்களுக்கு பிறகு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். அதனால், இருநாடுகளுக்கு இடையே இருந்த பதட்டமான நிலை தணிந்ததாக பேசப்பட்டது. இத்தகைய நிலையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.