ஜான்சிராணி போன்ற பெண்களால் தான் குதிரை சவாரி செய்ய முடியும்.. மற்றவர்களால் குதிரை சவாரி என்பதை மேற்கொள்ள முடியாது என நண்பர் ஒருவர் விடுத்த சவாலை ஏற்று சாதித்துக் காட்டியிருக்கிறார் கேரளாவை சேர்ந்த 10-ஆம் வகுப்பு மாணவி கிருஷ்ணா.
கேரளாவின் திருச்சூர் மாவட்டம் மலாவைச் சேர்ந்தவர் கிருஷ்ணா. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் ஒருமுறையாவது தேர்வுக்கு தான் வளர்க்கும் குதிரையில் சவாரி செய்ய வேண்டுமென விரும்பியுள்ளார் .அதன்படி தன்னுடைய கடைசி தேர்வை எழுத குதிரையில் புறப்பட்ட கிருஷ்ணாவை சாலையில் சென்ற ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அது வைரலானது. இந்த வீடியோவைப் பார்த்து ஆச்சர்யப்பட்டுப் போன மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா, 'அந்த மாணவி திறமைசாலி என்று புகழ்ந்து ட்விட் செய்தார்.
கிருஷ்ணாவின் குதிரை சவாரி பயிற்சி பின்னால் ஒரு கதையும் உண்டு. இதுகுறித்து கிருஷ்ணா கூறும்போது, “ நான் ஏழாவது படிக்கும் போதெல்லாம் குதிரை சவாரிக்கு ரொம்பவே பயப்பட்டேன். அப்போது என் நண்பர் ஒருவர் என்னிடம் ‘ ஜான்சிராணி போன்ற பெண்களால் தான் குதிரை சவாரி செய்ய முடியும்.. மற்றவர்களால் செய்ய முடியாது’ என்றார். அப்போது தான் என் மனதிற்குள் ஒரு எண்ணம் வந்தது. ஏன் என்னை போன்ற சாதாரண பெண்களால் குதிரை சவாரி செய்ய முடியாதா என்று.. அந்த எண்ணத்தில் தான் குதிரை சவாரியை கற்றுக்கொண்டேன். எனது அப்பா எங்கள் வீட்டிற்கு ஒரு குதிரை வாங்கி வந்தார். அதன்மூலமே பயிற்சி பெற்றேன்” என தெரிவித்துள்ளார்.