லாட்டரி அதிபர் மார்டினுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையின் போது, வீட்டின் மேற்கூரை மற்றும் மரப்படிக்கட்டுகளில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீடியோ வெளியாகிவுள்ளது.
லாட்டரி அதிபர் மார்ட்டினை கொல்கத்தா விமான நிலையத்தில் பிடித்த, வருமான வரித்துறை அதிகாரிகள், அவருக்குச் சொந்தமான வீடு, சொகுசு பங்களா, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தினர். கோவை, சென்னை, கொல்கத்தா, டெல்லி, ஹைதராபாத், கவுகாத்தி, சிலிகுரி உள்ளிட்ட 70 இடங்களில் கடந்த 30 ஆம் தேதி தொடங்கிய இந்தச் சோதனை நேற்று நிறைவடைந்தது.
ஐந்து நாட்களாக நடைபெற்ற இந்தச் சோதனையின் போது, கணக்கில் வராத 595 கோடி ரூபாய் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள், 619 கோடி ரூபாய் மதிப்பில் முதலீடு செய்யப்பட்டவைக்கான ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகத் தெரிகிறது. இதேபோல, கணக்கில் வராத 5 கோடியே 80 லட்சம் ரூபாய் ரொக்கம், சுமார் 24 கோடியே 57லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைர நகைகளும் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மார்ட்டினுக்குச் சொந்தமான இடங்களில் வீட்டின் மேற்கூரை, மரப்படிக்கட்டுகளில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்த வீடியோவை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. இதேபோல, கட்டிலுக்கு அடியில் ஆவணங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்த காட்சியும் வெளியாகியுள்ளது.