புதன்கிழமை தொலைந்துபோன ரஃபேல் ஆவணங்களை வியாழக்கிழமையன்று திருடனே கொண்டு வந்து வைத்துவிட்டானா? என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஃபேல் விமானங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்ற வழக்கில் விமான ஒப்பந்தத்தில் எந்தத் தவறும், முறைகேடுகளும் நடக்கவில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து தீர்ப்பை மீண்டும் விசாரிக்க வேண்டுமென கடந்த மாதம் வழக்கு தொடரப்பட்டது.
இதில், வாதாடிய அரசு தலைமை வழக்கறிஞர் கே.கே வேணுகோபால், திருடுபோன ரஃபேல் தொடர்பான ஆவணங்களின் அடிப்படையில்தான் ‘இந்து’ பத்திரிகை தகவல்களை வெளியிட்டிருக்கிறது. அந்த ஆவணங்களை ஏற்கக்கூடாது என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் அரசுத் தரப்பு வாதங்கள் முடிவற்ற நிலையில் வழக்கு விசாரணை வரும் 14ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் திருடு போனதாக வெளிவந்த தகவல்கள் விமர்சனங்களையும், சர்ச்சைகளையும் எழுப்பியது. மீண்டும் தனது வாதத்தை தெளிவுபடுத்திய வேணுகோபால், ''நான் உச்சநீதிமன்றத்தில் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. ரஃபேல் ஆவணங்கள் பாதுகாப்புத்துறை அமைச்சக்கத்திடமிருந்து திருடப்படவில்லை. அந்த ஆவணங்களின் நகல்கள்தான் பத்திரிகைகளில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அதை தான் எதிர் மனுதாரர்கள் பயன்படுத்தியதாக நான் குறிப்பிட்டேன்'' என்று தெரிவித்தார்.
இந்நிலையில் வேணுகோபாலின் வாதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், “ரஃபேல் ஆவணங்கள் புதன்கிழமை தொலைந்து போனது; வெள்ளிக்கிழமை நகல் ஆனது. இடையில் வரும் வியாழக்கிழமையன்று திருடனே ஆவணங்களைக் கொண்டு வந்து வைத்துவிட்டானா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.