2019-ஆம் ஆண்டு நடந்த மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றன. 145 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தேவை என்ற நிலையில் 161 இடங்களை கைப்பற்றிய அந்த கூட்டணி கட்சிகள் உடனடியாக ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலமைச்சர் பதவியை இரு கட்சிகளும் தலா இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதில் சிவசேனா பிடிவாதமாக இருந்தது. முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதல் காரணமாக அந்த கூட்டணி உடைந்தது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் உடன் சேர்ந்து அரசை அமைத்தது. இதையடுத்து தேவேந்திர பட்னாவிஸ் சட்டசபை எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.