இந்திய விமானப்படை வீரர் ஒருவர் காணமல் போனதற்கு ராகுல் காந்தி வருத்ததை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14 ஆம் தேதி பயங்கரவாத தாக்குதல் நடத்தபட்டது. இந்தத் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தின. புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை துல்லிய தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகள் முகாம்களை அழித்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லையில் விமானப் படையினர் உஷார்படுத்தப்பட்டனர். இருப்பினும், இன்று காலை எல்லைக்குக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் போர் விமானத்தை இந்திய ராணுவம் விரட்டியடித்தது. இதுதொடர்பாக, டெல்லியில் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார், “ இந்தத் தாக்குதலின் போது மிக் 21 விமானத்தை நாம் இழந்துவிட்டோம். அந்த விமானியின் நிலைகுறித்து தெரியவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பாகிஸ்தானின் துணைத் தூதரான சையத் ஹைதர் ஷாவிற்கு சம்மன் அனுப்பியது. இதுகுறித்து உறுதி செய்யவும் மற்றும் பாகிஸ்தான் விமானம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததற்கு கண்டனம் தெரிவிக்கவும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். ராகுல் காந்தி “ இந்திய விமானப்படையின் விமானி ஒருவர் காணாமல் போனது வருத்தமளிக்கிறது. அவர் விரைவில் எந்தவித சேதமுமின்றி நாடு திரும்ப வேண்டும். அத்துடன் இந்த மாதிரியான இக்கட்டான சூழல்களில் நாம் ராணுவத்திற்கு துணை நிற்க வேண்டும்” என பதிவிட்டுள்ளார்.