"இப்படி பழிவாங்குவார்கள் என்று எனக்கு தெரியாது" என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இன்று காலை நாட்டிலேயே மிகவும் பரபரப்பான இடமாக அநேகமாக புதுச்சேரி தான் இருந்திருக்கும். ஏனென்றால் அங்கு அரசியல் காட்சிகள் க்ளைமாக்ஸை நெருங்கிக் கொண்டிருந்தது. ஆளும் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உத்தரவிட்டிருந்த நிலையில், 12 உறுப்பினர்களுடன் காங்கிரசும், 14 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சியினரும் சட்டப்பேரவை வர தயாரானார்கள்.
முதலில் காலை 9.30 மணிக்கு பேரவைக்குள் அதிமுக, திமுக மற்றும் நியமன பாஜக உறுப்பினர்கள் வந்தனர். 9.55 மணிக்கு ஆளுங்கட்சி ஆதரவு சுயேட்சை எம்எல்ஏ வருகை தந்தார். 9.58 மணிக்கு பேரவைக்கு வந்த நாராயணசாமி, சபாநாயகர் சிவக்கொழுந்துவுடன் ஆலோசனை நடத்தினார். அதனைத் தொடர்ந்து 10.03க்கு பேரவைக்குள் நாராயணசாமி உள்ளிட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் வந்தனர்.
அதனைத் தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த நாராயணசாமி அவையில் பேசத் தொடங்கினார். அப்போது மத்திய அரசு மீது சரமாரியான குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார். சுமார் ஒரு மணி நேரம் நாராயணசாமி பேசியதை அடுத்து, அவரது உரைக்கு அதிமுக எம்எல்ஏ அன்பழகன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக நியமன உறுப்பினர்கள் மூவருக்கும் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் கட்சியினர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 எம்எல்ஏ-க்கள் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும், நியமன உறுப்பினர்களை தவிர எதிர்க்கட்சியில் 11 எம்எல்ஏ-க்களே இருப்பதாகவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவுப்படி நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்க உரிமை உள்ளதாக பாஜக தரப்பினர் வாதம் செய்ய, காலை 11.15 மணிக்கு காங்கிரஸ் கூட்டணி எம்எல்ஏ-க்கள் வெளிநடப்பு செய்தனர்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் நாராயணசாமி அரசு தோல்வியடைந்ததாக சபாநாயகர் சிவக்கொழுந்து அறிவித்தார். 11.30 மணிக்கு காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் ஆலோசனை மேற்கொண்ட நாராயணசாமி, 11.40 மணிக்கு துணை நிலை ஆளுநர் மாளிகைக்கு சென்று அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தை வழங்கினார். நண்பகல் 12.15 மணிக்கு நாராயணசாமியின் ராஜினாமாவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஏற்றுக் கொண்டதாக தகவல் வெளியானது. புதுச்சேரியில் அரங்கேறி வந்த அரசியல் திருப்பங்கள் காங்கிரசுக்கு சோகமான க்ளைமாக்ஸாக அமைந்தது.
காங்கிரஸ் கட்சியில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் சந்தேகம் வராதபடி நடந்து கொண்டு இப்படி பழி வாங்குவார்கள் என்று தெரியாது என முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதிய தலைமுறைக்கு அளித்த பிரத்யேக பேட்டியின் போது அவர் இதனை தெரிவித்தார். பல சதித்திட்டங்களை சமாளித்து ஆட்சி நடத்தி வந்ததாகவும் அவர் கூறினார்.