மீடூ பாலியல் புகாரில் முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.
முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி மீடூ ஹேஷ்டேக் மூலம் கடந்த ஆண்டு பாலியல் குற்றச்சாட்டுக்களை முன் வைத்தார். அக்பர் பத்திரிகையாளராக பணியாற்றியபோது தனக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக அவர் கூறியிருந்தார். அந்தப் புகாரை தொடர்ந்து எம்.ஜே.அக்பர் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். பத்திரிகையாளர் ரமணி மீது அவமதிப்பு வழக்கையும் தொடர்ந்தார்.
இந்த நிலையில், எம்.ஜே.அக்பர் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் தலைமை மெட்ரோபோலிடன் நீதிபதி சமர் விஷால் முன்பு எம்.ஜே.அக்பர் ஆஜரானார். பத்திரிகையாளர் ரமணி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ரெபேக்கா ஜான் ஆஜரானார். அவர் எம்.ஜே.அக்பரை குறுக்கு விசாரணை செய்தார்.
அப்போது, ஆசியன் ஏஜ் பத்திரிகையில் ரமணி இணைந்தது குறித்து அக்பரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், பெரும்பாலான கேள்விகளுக்கு ‘எனக்கு ஞாபகமில்லை’ என்ற பதிலையே அவர் கூறினார். அதேபோல், தவறான நோக்கத்தின் அடிப்படையிலும், தன்னை அவமதிக்கும் நோக்கிலுமே இந்தப் புகார் கூறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
சுமார் இரண்டு மணி நேரம் இந்த விசாரணை நடைபெற்றது. பின்னர், இந்த வழக்கு விசாரணை மே 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.