போராட்டத்தை கைவிட வலியுறுத்தி விவசாயிகளுக்கு மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் 20 நாட்களை கடந்து நீடிக்கும் நிலையில் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் 8 பக்க கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அதில், "குறைந்தபட்ச விலை நிர்ணயத்தை மத்திய அரசு ஒரு போதும் கைவிடாது. பிரதமரின் வாழ்க்கையில் மிக முக்கியமான கடமைகளில் ஒன்று விவசாயிகள் நலன் காத்தல்.
புதிய வேளாண் சட்டங்களால் விவசாய நிலங்கள் பறிக்கப்படும் என பொய் பரப்புரை செய்யப்படுகின்றன. வேளாண் குடிமக்கள் யாரும் அதனை நம்ப வேண்டாம். இந்த சீர்திருத்தங்களை பல விவசாய தொழிற்சங்கங்கள் வரவேற்று மகிழ்ச்சியாக உள்ளன. நாட்டின் வேளாண் அமைச்சர் என்ற வகையில், எனது கடமை விவசாயிகளின் தவறான எண்ணங்களை அகற்றுவதும், இந்த நாட்டின் ஒவ்வொரு விவசாயியையும் பதற்றமில்லாமல் செய்வதும் ஆகும்.
விவசாயிகளுக்கும் மத்திய அரசிற்கும் இடையில் ஒரு சுவரை உருவாக்க சதித்திட்டம் தீட்டப்படுவதை அம்பலப்படுத்துவது எனது கடமை. நான் ஒரு விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். விவசாயத்தின் சவால்களைப் புரிந்துகொண்டு, வளர்ந்திருக்கிறேன். அகால மழையின் துயரத்தையும், சரியான நேரத்தில் பருவமழையின் மகிழ்ச்சியையும் நான் கண்டிருக்கிறேன். பயிர்களை விற்க வாரம் முழுவதும் காத்திருப்பதையும் நான் பார்த்திருக்கிறேன்” எனத் தெரிவித்தார்.
இதனிடையே மத்திய வேளாண் அமைச்சரின் கடித்தத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, மத்திய அமைச்சரின் கடிதத்தை அனைத்து விவசாயிகளும் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். வேளாண் சட்டங்களின் சிறம்பு அம்சங்கள் குறித்து மத்திய பிரதேச விவசாயிகள் மத்தியில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். காணொலியில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியை 23ஆயிரம் கிராமங்களில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக தோமர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோரை பாஜக தலைமையகத்தில் சந்தித்து விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து விவாதித்தார்.