செனகல் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள பிரபல தாதா ரவி புஜாரி, தான் டோனி பெர்னாண்டஸ் என்றும் தனக்கும் இந்தியாவில் உள்ள வழக்குகளுக்கும் சம்மந்தம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் ரவி புஜாரி. மும்பையில் தாவூத் இப்ராஹிமுடன் இணைந்து சில காலம் செயல்பட்ட அவர், பின்னர் சோட்டா ராஜனுடன் சேர்ந்தார். பிறகு, தனியாக சமூக விரோத செயல்களில் செயல்பட்டு வந்த இவர், தொழிலதிபர்கள், திரைத்துறையினரை மிரட்டி பணம் பறித்து வந்தார். பெங்களூர், மும்பை, குஜராத் உட்பட பல பகுதிகளில் கொலை, கொள்ளை வழக்குகளும் இவர் மீது உள்ளன. வெளிநாட்டில் அவர் தலைமறைவாக வாழ, அவரது கூட்டாளிகள் இங்குள்ள தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கும் செயல்களில் ஈடுபட்டு வந்தனர். சமீபத்தில் கேரள நடிகையின் பியூட்டி பார்லர் கூட இவரது கூட்டாளிகளால் தாக்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்கு முன், இந்தி பட இயக்குனர் மகேஷ் பட்டுக்கு ரவி புஜாரி பெயரில் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ரவி புஜாரி கூட்டாளிகள் சிலரை மும்பை போலீசார் கைது செய்திருந்தனர். ரவி புஜாரி வெளிநாட்டில் பதுங்கி இருப்பதால், அவர் தேடப்படும் குற்றவாளி என, 'ரெட் கார்னர்' நோட்டீஸ் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் செனகல் நாட்டில் ரவி புஜாரி சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார். அங்குள்ள ஓட்டல் ஒன்றுக்கு வந்த அவரை, அந்த நாட்டு போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரை இந்தியா கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்தது. இந்நிலையில், ’’தான் ரவி புஜாரியே இல்லை. என் பெயர் டோனி பெர்னாண்டஸ்’’ என்று அவர் தெரிவித்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள புர்க்கினா பாசோ நாட்டின் பிரஜை என்று கூறியுள்ள ரவி புஜாரி, இந்தியாவில் உள்ள வழக்குகளுக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்று அவர் வழக்கறிஞர்கள் மூலம் செனகல் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். இதனால் அவரை கைது செய்து அழைத்துச் செல்ல, தேவையான ஆவணங்களை செனகல் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.
சர்வதேச சட்டப்படி, ரவி பூஜாரியை அழைத்து வர இந்திய போலீசாருக்கு 90 நாட்கள் கால அவகாசம் உள்ளது. அதற்குள், அவர் மீதான குற்ற ஆவணங்கள் அனைத்தையும் செனகல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்து, அவரை இந்திய போலீசார் தங்கள் வசம் பெற வேண்டும். ஆனால், இதை தாமதப்படுத்தும் நோக்கில் ரவி பூஜாரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அவர், ரவி புஜாரிதான் என்பதை நிரூபிக்க, டெல்லியில் உள்ள அவரது சகோதரிகள் ஜெயலட்சுமி சலியன், நைனா புஜாரி ஆகியோரிடம் டி.என்.ஏ சோதனை செய்ய கர்நாடக மற்றும் மும்பை போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் அவரை இந்தியா கொண்டு வர தாமதம் ஆகும் என்று தெரிகிறது.