தான் ஒரு முஸ்லீமாக இருக்கவே விரும்புகிறேன் என்று ஹாதியா உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்த ஹாதியா, சேலம் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் படித்து வந்தார். இவர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த இளைஞர் சபி ஜகானை மதம் மாறி காதல் திருமணம் செய்துகொண்டார். தனது மகளை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்துவிட்டதாக ஹாதியாவின் பெற்றோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கேரள உயர்நீதிமன்றத்தில் ஹாதியாவின் பெற்றோர்களுக்கு சாதகமான தீர்ப்பு வெளியானது. ஹாதியா சேலம் ஹோமியோபதி கல்லூரியில் தனது படிப்பை தொடர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. இதனையடுத்து ஹாதியா ஹோமியோபதி கல்லூரியின் ஹாஸ்டலில் தங்கி படிப்பை தொடர்ந்து வருகிறார்.
இந்நிலையில், ஹாதியா 25 பக்க பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், “நான் ஒரு முஸ்லீம். தொடர்ந்து முஸ்லீமாகவே இருக்க விரும்புகிறேன். என்னுடைய சுதந்திரத்தை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும். ‘தொடக்கம் முதலே எனது தந்தை சிலரின் உந்துததால் செயல்பட்டு வருகிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் எந்த தொடர்பும் இல்லாத எனது கணவர் மீது அல்ல. எனது பெற்றோர்களும், மற்றவர்களும் இஸ்லாமை கைவிடுமாறும், கணவரை விட்டு வருமாறும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர்’ என்று வலியுறுத்தியுள்ளார்.
“நான் எனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன். சுதந்திரம் இல்லாமல் எனது உரிமைகளை நிலைநாட்ட முடியாமல் ஒரு சிறைவாசத்தில் தற்போது உள்ளேன். தற்போதும், போலீசாரின் கண்காணிப்பில் நான் உள்ளேன்” என்று தனது கவலையை கூறியுள்ளார்.