வரும் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலுக்காக இந்துத்துவா, மிகை தேசியவாதம் மற்றும் பொது நலன் போன்றவற்றை முன்வைத்து "வலிமையான பிம்பத்தை " ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்திருக்கிறார்.
ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் களம் மற்றும் பாஜகவின் தேர்தல் வியூகங்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரசாந்த் கிஷோர், "பாஜகவின் புகழ் இந்துத்துவா செயல்பாடு மட்டுமல்ல, இது முக்கியமான ஒன்றுதான். ஆனால் மிக முக்கிய காரணியாக மற்ற இரு கூறுகள் உள்ளன. அவற்றில் ஒன்று மிகை தேசியவாத விஷயம், மற்றொன்று மக்களின் நலவாழ்வு குறித்த திட்டங்கள் ஆகும்.
தனிநபர் நலன்குறித்த திட்டங்கள், தேசியவாதம் மற்றும் இந்து மதம் ஆகிய மூன்றும் ஒன்றாகச் சேர்த்தால், அது மிகவும் வலிமையான பிம்பமாக மாறும். பாஜகவை எதிர்க்கும் கட்சிகளிடம் மேற்கூறிய மூன்றில் இரண்டை சிறப்பாகச் செய்யும் திறன் இல்லையென்றால், அவர்கள் பாஜகவுக்கு எதிராக வெல்ல மிகக் குறைவான வாய்ப்புகளே உள்ளன" என்று கூறினார்.
மேலும்,"சட்டசபைத் தேர்தல்களில் பாஜக சிறப்பாகச் செயல்படவில்லை என்றால் அதற்கு காரணம் அங்கே தேசியவாதக்கூறு வேலை செய்யவில்லை என்பதுதான். மாநிலங்களில் ஏன் தேசியவாதக்கூறு வேலை செய்வதில்லை என்றால், அங்கே துணைப் பிராந்தியவாதம் வலுவாக உள்ளது. ஆனால் தேசியத் தேர்தல்கள் என்று வரும்போது, இந்தத் தேசியவாதம் பாஜகவை எளிதாக வெல்ல வைக்கிறது " என்று அவர் கூறினார்.
2024 பொதுத்தேர்தலுக்கான எதிர்க்கட்சிகளின் வாய்ப்புகள் குறித்து பேசிய பிரசாந்த் கிஷோர்,"2024ல் பாஜகவை தோற்கடிப்பது சாத்தியமா என்றால் 'ஆம்' என்பதுதான் என் பதில். ஆனால் தற்போதுள்ள போட்டியாளர்கள் மற்றும் அமைப்புகளால் அது சாத்தியமா என்றால் 'ஒருவேளை இல்லை' என கூறலாம். ஆனால் , இவற்றை கொஞ்சம் சரிசெய்தால் வெற்றி நிச்சயம்.
பீகார் 2015-க்குப் பிறகு ஒரு 'மகா கூட்டணி' கூட நாட்டில் வெற்றிபெறவில்லை. கட்சிகள் மற்றும் தலைவர்கள் ஒன்றிணைவது மட்டும் போதாது. அவர்களின் சிந்தனை மற்றும் வெளிப்பாடு ஒன்றாக இருக்கவேண்டும். பா.ஜ.க.வை தோற்கடிக்க விரும்பும் எந்தக் கட்சிக்கும் அல்லது தலைவருக்கும் 5-10 வருட அரசியல் கண்ணோட்டம் இருக்க வேண்டும். ஐந்து மாதங்களில் இதை செய்ய முடியாது, ஆனால் இது நடக்கும், இதுதான் ஜனநாயகத்தின் சக்தி" எனக் கூறினார்.