ஹைதாராபாத் நகரைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி வரைந்த ஓவியங்கள், லண்டனில் உள்ள உணவகத்தை அலங்கரிக்கும் பெருமையைப் பெற்றுள்ளன. கலைஞர்களுக்கு எப்போதும் அங்கீகாரம் தேவைப்படும். ஆனால் மாணவி ஆஸ்னாவுக்கு மிகப்பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
மாணவி ஆஸ்னாவின் ஓவியங்களை அவரது தந்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். தெற்கு லண்டனைச் சேர்ந்த அதீனா கிட்சன் உணவகத்தை நடத்திவரும் அதிபர், அந்த ஓவியங்களை தன் உணவகத்தில் காட்சிப்படுத்தியுள்ளார்.
சையதா ஆஸ்னா துராபி என்ற பெயரைக் கொண்ட பத்தாம் வகுப்பு மாணவியின் ஓவியங்கள் பிரிட்டிஷ் தொழிலதிபரின் மனங்கவர்ந்துள்ளது ஆச்சரியமாகப் பார்க்கப்படுகிறது.
"என் மகளின் திறமையில் பெருமைப்படுகிறேன். நான் அவருடைய ஓவியத் திறமையை மேம்படுத்துவதற்கு உதவியாக இருந்து வருகிறேன். அவரது ஓவியங்களுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது" என்கிறார் மாணவியின் தந்தை.
ஹைதராபாத் உணவுகளுக்குப் பிரபலமான அதீனா உணவகத்தில் மாணவி வரைந்த ஓவியங்கள் ஆறு அடியில் வைக்கப்பட்டுள்ளன. அவரது ஓவியங்கள் இந்தியப் பண்பாட்டைப் பிரதிபலிப்பதாக உள்ளன.