காலில் அடிப்பட்ட முதியவரை முதுகில் தூக்கிச்சென்று உதவிய போக்குவரத்து காவலருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
ஹைதராபாத், கே.எல். நகர் பகுதியில் மழைநீர் சாலையெங்கும் பெருக்கெடுத்து ஓடியது. அப்பகுதியில் குப்பைகள் தேங்கியிருந்ததால் முழங்காலுக்கு மேலே நீர் தேங்கியிருந்தது. அதை சரிசெய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதை போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகமல்லு மேற்பார்வையிட்டு கொண்டிருந்தார்.
இந்நிலையில் அங்கு ஒரு இளைஞர் ஸ்கூட்டரில் வயதானவரை ஏற்றிக்கொண்டு சவாரி செய்து வந்தார். ஆனால் மழை நீர் அதிகளவு தேங்கியிருந்ததால் அவரால் சாலையை கடக்க முடியவில்லை. இதைப்பார்த்த போலீஸ் அங்கு சென்று முதியவரை தனது முதுகில் தூக்கிக்கொண்டு சாலையை கடக்க உதவினார். அந்த முதியவருக்கு காலில் அடிப்பட்டு கட்டு போடப்பட்டிருந்தது.
இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த பலரும் காவலருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்து வருகின்றனர்.