ஐதராபாத்தில் இருந்து 7 வருடங்களுக்கு முன்பு ஓடிப் போன்ற சிறுவன், ஃபேஸ்புக் உதவியாக மீண்டும் தனது குடும்பத்தின் உதவியுடன் சேர்ந்துள்ளார். கடந்த 2011ம் ஆண்டு மும்பைக்கு ஓடிப்போன சிறுவன் சுஷித் தற்போது 23 வயதில் கண்டுபிடிக்கப்பட்டான்.
ஐதராபாத் நகரின் மல்கஜ்கிரியில் உள்ள மவுலா அலி பகுதியில் தனது அக்கா வீட்டில் வசித்து வந்தான் சுஜித். தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த சுஜித், ஒருநாள் திடீரென வீட்டில் இருந்து ஓடிவிட்டார். பள்ளி சென்ற சுஜித் வீடு திரும்பாததால் அன்று முழுவதும் அவரது அக்கா வீட்டுக்காரர் அஜித் குமார் அவரை தேடியுள்ளார். தேடியும் கிடைக்காத நிலையில், 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் காவல் நிலையத்தில் அஜித் குமார் புகார் அளித்தார்.
அந்தப் புகார் குறித்து டெக்கன் கிரானிகலிடம் அவர் பேசுகையில், “ஒருநாள் வீட்டை விட்டுச் சென்ற சுஜித் வீடு திரும்பவில்லை. எல்லா இடங்களிலும் தேடிய பின்னர், போலீசில் புகார் அளித்தேன். அவன் காணாமல் போனது எனக்கு மிகவும் வருத்தமாக ஆகிவிட்டது. அவனுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்று தான் கிராமத்தில் இருந்து நகருக்கு கட்டாயப்படுத்தி அழைத்து வந்தேன்” என்றார்.
அஜித் குமார் அளித்த புகாரின் பேரில் மல்கஜ்கிரி போலீஸ் காணாமல் போன சுஜித்தை தேடினர். ஆனால், அவர்களால் சுஜித்தை கண்டுபிடிக்க முடியவில்லை. ஐதராபாத்தில் இருந்து ஓடிய சுஜித் மும்பைக்கு சென்று கேட்டரிங் காண்ட்ராக்டரிடம் வேலை செய்து வந்துள்ளான்.
இதனிடையே, சமூக வலைத்தளங்களிலும் மாமா அஜித் குமார் அவனை தேடிய வண்ணம் இருந்துள்ளார். அப்போது ஃபேஸ்புக்கில் சுஜித்தின் செல்லப் பேரில் ஒரு ஐடி இருந்துள்ளது. இதனை கண்ட உடன் அந்த ஐடிக்கு அவர் பிரண்ட் அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், தனது மாமா தான் அழைப்பு விடுக்கிறார் என்பதை அறிந்து கொண்டு அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. உடனடியாக ஃபேஸ்புக்கில் பதிவிட்ட தனது செல்லப் பேரையும் மாற்றியுள்ளார்.
இதனால், காணாமல் போன மனைவியின் சகோதரர் சுஜித்தான் அது என்பதை அஜித் குமார் உறுதி செய்துள்ளார். இந்தத் தகவலை உடனடியாக மல்கஜ்கிரி காவல்நிலையத்தில் தெரிவித்துள்ளார். அந்தத் தகவலின் அடிப்படையில் போலீசார் சைபர் கிரைமை அணுகியுள்ளனர். சைபர் கிரைம் போலீசார் டெக்னிக்கல் பிரிவு உதவியுடன் சுஜித்தின் ஃபேஸ்புக்கை ஆய்வு செய்தனர். இந்த முயற்சியால் மும்பையில் சுஜித் இருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதனையடுத்து, இன்ஸ்பெக்டர் ஜலேந்தர் ரெட்டி தலைமையிலான குழு சுஜித்தை தேடி மும்பையில் உள்ள மஜ்கான் பகுதிக்கு சென்றது. தற்போது 23 வயதாகும் சுஜித்தை போலீசார் கண்டறிந்து ஐதராபாத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர், பெற்றோர்கள் மற்றும் உறவினர்களிடம் சுஜித் ஒப்படைக்கப்பட்டார். 7 வருடங்களுக்கு பிறகு சுஜித் கிடைத்ததில் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். ஃபேஸ்புக் உதவியால காணாமல் போன சிறுவன் மீண்டும் குடும்பத்துடன் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.