மின்கட்டணத்தை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் கட்டாமல் போனால் மின்வாரிய அலுவர்கள் மின் இணைப்பை துண்டித்துச்செல்வர். இது காலம்காலமாக நடக்கும் ஒன்றுதான். ஆகையால் எது இருக்கோ இல்லையோ... அரசாங்க சம்பந்தப்பட்ட அனைத்து வரிகளையும், கட்டணங்களையும் தவறாமல் செலுத்துவதை மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஹைதராபாத்தில் மின்கட்டணம் செலுத்தாத ஒருவரது வீட்டின் மின் இணைப்பை துண்டித்ததற்காக மின் ஊழியர்களை கிக்பாக்ஸர் தாக்கிய சம்பவம் வைரலாகி வருகிறது.... என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
ஹைதராபாத் மாநிலம் சனத்நகரில் உள்ளா எர்ரகட்டா, மோதிநகர் பகுதியில் ஒரு வீட்டில் மின்கட்டணம் ரூபாய் 9858 ரூபாய் செலுத்தப்படாமல் இருக்கவே அவ்வீட்டின் மின் இணைப்பை துண்டிப்பதற்காக மின் வாரிய ஊழியர்களான ஸ்ரீகாந்த் மற்றும் சாய் கணேஷ் ஆகியோர் சென்றுள்ளனர்.
அவ்வீட்டிலிருப்பவரின் மகன் ஒரு குத்துசண்டை வீரர் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும், மின் ஊழியர்கள் குத்துசண்டை வீரரிடம், “நீங்கள் மின்கட்டணத்தை செலுத்தவில்லை... ஆகையால் நாங்கள் மின் இணைப்பை துண்டிக்க வந்துள்ளோம். நீங்கள் மின் கட்டணத்தை செலுத்தியதும் நாங்கள் கனெக்ஷன் கொடுத்துவிடுவோம்” என்று கூறி மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
இதைக்கண்டு ஆத்திரம் அடைந்த குத்துசண்டை வீரர், எப்படி எங்கள் வீட்டின் மின் இணைப்பை துண்டிக்கலாம் என்று கூறி அந்த ஊழியர்களில் ஒருவரான கணேஷின் முகத்தில் சில குத்துக்களை விட்டார். தடுக்க சென்ற ஸ்ரீகாந்தையும் குத்துசண்டை வீரர் தாக்கியுள்ளார். இதைக்கண்ட அப்பகுதி மக்கள் குத்துசண்டை வீரரிடமிருந்து மின் ஊழியர்களை காப்பாற்றினர். இருப்பினும் காயமடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட மின் ஊழியர்கள் நடந்த சம்பவம் குறித்து சனத்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் குத்துச்சண்டை வீரரை கைது செய்த போலிசார் அவர்மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது