பெண் மருத்துவர் தற்கொலை - சாதியக்கொடுமை காரணமா?
ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் ஜெயஸ்ரீ நேற்று முன் தினம் இரவு அதிக மயக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது பெண்ணின் கணவர் திரும்பத் திரும்ப வரதட்சணை பணம் கேட்டு கஷ்டப்படுத்தியதும் சாதி பெயரை குறிப்பிட்டு கொடுமை படுத்தியதுமே தற்கொலைக்கு காரணம் என பெண்ணின் தந்தை புகார் கூறியுள்ளார்.
சீனாவில் மருத்துவ மேற்படிப்புக்காக சென்றபோது ஜெயஸ்ரீ மற்றும் கார்த்திக் இருவரும் சந்தித்து காதல் வயப்பட்டுள்ளனர். கார்த்திக் வேறு வகுப்பை சேர்ந்தவர். ஜெயஸ்ரீ பட்டியல் வகுப்பைச் சேர்ந்தவர். இந்நிலையில் ஜெயஸ்ரீ, கார்த்திக்கை கடந்த 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.
திருமணமான மூன்றே வருடத்தில் நேற்றுமுன் தினம் இரவு அதிக மயக்க மாத்திரைகளை சாப்பிட்டு ஜெயஸ்ரீ தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ஜெயஸ்ரீயின் தந்தை குருவையா கூறுகையில், தனது பெண்ணின் கணவர் திரும்பத் திரும்ப வரதட்சணை பணம் கேட்டு கஷ்டப்படுத்தியதும் சாதிப் பெயரை குறிப்பிட்டு கொடுமைப்படுத்தியதுமே பெண்ணின் தற்கொலைக்குக் காரணம் எனப் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும், கார்த்திக் வேறு சாதி என்பதால் நாங்கள் முதலில் ஜெயஸ்ரீவின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தோம். ஆனால் ஜெயஸ்ரீ பிடிவாதமாக இருந்ததால் ஒப்புக்கொண்டோம். திருமணத்தின் போது கார்த்திக் குடும்பத்தார் வரதட்சணையாக ரூ.25 லட்சம் பணமும் 45 டோலஸ் தங்கமும் 2 கிலோ வெள்ளியும் வாங்கியதாகவும் கடந்த ஆண்டுவரை ஜெயஸ்ரீ, கார்த்திக் திருமண வாழ்க்கை நன்றாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார்.
பின்பு கார்த்திக் தனது ஆடம்பர வாழ்க்கைக்காக அடிக்கடி தன்னிடம் பணம் கேட்டு வந்தார். முதலில் பணம் கொடுத்தேன், பின், அவர் பணத்தை திருப்பி தராததால் நான் பணம் கொடுப்பதை நிறுத்தி விட்டேன். இதனால் ஜெயஸ்ரீக்கும் கார்த்திக்கிற்கும் இடையில் பிரச்னை ஏற்பட ஆரம்பித்ததாகவும் கார்த்திக் மற்றும் அவரின் குடும்பத்தார் தன்னிடம் வரதட்சணை கேட்டும், தன் பெண்ணை சாதியின் பெயரை குறிப்பிட்டு துன்புறுத்தி வந்ததாகவும் குருவையா திநியூஸ் மினிட் வலைதளத்திற்கு அளித்த பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து போலிசார் கூறுகையில், செவ்வாய்கிழமை ஜெயா வேலைக்கு செல்லாமல் தனியாக வீட்டில் இருந்துள்ளார். அன்று இரவு கார்த்திக்கும் ஜெயாஸ்ரீயும் இரவு உணவுக்காக வெளியில் செல்ல இருந்ததாக தெரிகிறது. ஆனால் கார்த்திக் வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் போது ஜெயா மயக்க நிலையில் இருந்துள்ளார். பின் அவர்களது குடும்பத்தார் ஜெயாஸ்ரீயை மருத்துவமனைக்கு தூக்கி சென்றபோது அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து பெண்ணின் தந்தை அளித்த புகாரின் அடிப்படையில், வரதட்சணை கொடுமை சட்டம் 304 மற்றும் சாதிக்கொடுமை அடிப்படையிலான சட்டப்பிரிவுகளின் கீழ் கார்த்திக்கை கைது செய்து போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.