தனது பிறந்தநாளை முன்னிட்டு 7ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுவன் சின்மய் சித்தார்த் ஷா, ஹைதராபாத்தில் உள்ள நேரு விலங்கியல் பூங்காவில் ஒரு வங்கப்புலியை தத்தெடுத்துள்ளான்.
சங்கல்ப் எனப் பெயர்கொண்ட புலியை 3 மாதத்திற்கு தத்தெடுத்து, ரூ25 ஆயிரம் காசோலையைக் கொடுத்துள்ளதாக பூங்கா ஏ.என்.ஐக்கு கொடுத்த பத்திரிகை அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த ஒரே நாளில் சின்மய் தவிர, ஹர்விஷா ஜெய்ன், விஹான் அதுல் ஜெய்ன் என்ற மற்ற இரண்டு மாணவர்களும் இரவுநேர விலங்குகளைத் தத்தெடுத்துள்ளனர்.
மேலும் ப்ரெக்ஷா, பிரியல் மற்றும் பக்தி நாக்டா என்ற மூன்று பெண்களும் சில சிறிய பறவைகளைத் தத்தெடுத்து ஒவ்வொன்றுக்கும் ரூ.5 ஆயிரம் காசோலையை வழங்கியதாக பூங்காவின் டெப்யூட்டி க்யுரேட்டர் நாகமணி தெரிவித்துள்ளார். மேலும் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, விலங்குகள் மற்றும் பறவைகளைத் தத்தெடுப்பதன் முக்கியத்துவம் பற்றியும் கூறியுள்ளார். மற்றவர்களும் விலங்குகள் மற்றும் பறவைகளைத் தத்தெடுக முன்வருமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஜூலை 11ஆம் தேதி கடம்பா என்ற புலி இந்த பூங்காவில் இறந்துபோனது. ஜூன், ஜூலை இரண்டு மாதத்திற்குள் உடல்நலக்குறைவால் 2 புலிகள் இறந்துள்ளது. இப்போது இந்த பூங்காவில் 8 பெரிய புலிகள் மற்றும் 3 குட்டிகள் என 11 வங்கப்புலிகள் உள்ளது.