மிஸ்டுகால் காரணமாக ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கணவன் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைசூர் மாவட்டம் உன்சூர் அருகேயுள்ள கொப்பலு கிராமத்தை சேர்ந்தவர் தர்மா (45). விவசாயி. இவரது மனைவி லட்சுமி (35). லட்சுமியின் போனுக்கு அடிக்கடி மிஸ்டுகால் வந்துள்ளது. அந்த எண், அந்த செல்போனை பழுதுபார்த்த உள்ளூர் இளைஞரின் எண் என்பது தர்மாவுக்கு தெரியவந்தது. அடிக்கடி மிஸ்டுகால் வந்ததால் மனைவுக்கும் அவருக்கும் தொடர்பு இருக்குமோ என்று சந்தேகப்பட்டார். பின்னர் அந்த வாலிபரிடம் சென்று, ஏன் அடிக்கடி மிஸ்டு கால் கொடுக்கிறாய் என்று சண்டை போட்டார். உள்ளூர்க்காரர்கள்சமாதானம் செய்து வைத்தனர். இருந்தாலும் தர்மாவுக்கு மனைவி மீது சந்தேகம் அதிகரித்தது.
இந்நிலையில் நேற்று முன் தினமும் அந்த வாலிபரின் எண்ணில் இருந்து மீண்டும் மிஸ்டு கால் வந்தது. இதைக்கண்ட தர்மா, தனது மனைவிக்கும் அந்த வாலிபருக்கு தொடர்பு இருப்பதால்தான் மிஸ்டுகால் கொடுக்கிறான் என்று நினைத்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். பின்னர், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பியோடிவிட்டார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த லட்சுமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீசார் தர்மாவை கைது செய்தனர்.
மிஸ்டு கால் சந்தேகத்தால் கணவனே மனைவியை கொன்ற சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.