அகமதாபாத்தில் ’மனைவி மாற்று’ முறையில் தன் நண்பருடன் வாழுமாறு தொல்லைக்கொடுத்த கணவர்மீது மனைவி போலீஸில் புகார் கொடுத்திருக்கிறார்.
அகமதாபாத்தில் எஸ்.ஜி சாலை பகுதியில் வசித்து வரும் 40 வயது பெண்மணிக்கு கடந்த 2004-ம் ஆண்டு திருமணமாகியுள்ளது. திருமணமான 14 ஆண்டுகளுக்குப் பிறகு, தனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரியவந்திருக்கிறது. இதுபற்றி தனது கணவரிடம் கேட்டபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதிலிருந்து அந்த நபர் தனது மனைவியை மோசமாக நடத்த ஆரம்பித்திருக்கிறார்.
இதுகுறித்து அந்த பெண் டைம்ஸ் ஆஃப் இந்தியாவிடம் கூறுகையில், "எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பது தெரியவந்ததும் எங்களுக்குள் சண்டை, சச்சரவுகள் ஏற்பட்டது. ’மனைவி மாற்று’ முறையில் தனது நண்பர் ஒருவருடன் இருக்குமாறு எனது கணவர் என்னை தொந்தரவு செய்து வந்தார். மேலும், எனது 11 வயது மகனை பிப்ரவரி மாதமே எனக்குத் தெரியாமல் கூட்டிச் சென்று அவருடைய மாமா வீட்டில் மறைத்து வைத்துவிட்டார். இது தெரிந்தவுடன் நான் எனது மகனைப் பார்க்க கணவருடைய மாமா வீட்டிற்குச் சென்றேன். ஆனால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை’’ என்று கூறியிருக்கிறார்.
இந்த வழக்கை விசாரித்த காவல் அதிகாரி இதுகுறித்து கூறுகையில், ‘’குழந்தையை மறைத்து வைத்தது மட்டுமில்லாமல், நீண்ட நாட்களாகவே மாமனார் மற்றும் மாமியாரும் தனது குழந்தைக்கு சமைக்கக்கூட அந்தப் பெண்ணை சமையலறைக்குள் அனுமதிக்கவில்லை என்று விசாரணையில் தெரியவந்திருக்கிறது. மேலும் ஜூலை மாதம் அந்த பெண்ணின் அறையிலிருந்து வலுகட்டாயமாக அவரை வெளியேற்றி, வீட்டை விட்டு செல்லுமாறு வற்புறுத்தி இருக்கின்றனர். அதிலிருந்து தனது மகனின் அறையில் இருந்து வந்ததும் விசாரனையில் தெரியவந்துள்ளது’’ என்று தரப்பில் கூறியிருக்கிறார்.
மேலும் இந்திய சட்டப்பிரிவுகள் 498(ஏ), 294(பி), 323 மற்றும் 114-ன் கீழ் அந்தப் பெண்ணின் கணவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.