இந்தியாவில் 100 வது யுனிகார்ன் நிறுவனத்துக்கான கவுண்ட் டவுன் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பின் டெக் துறையை சேர்ந்த `ஓபன்’ 100வது யுனிகார்ன் நிறுவனமாக மாறி இருக்கிறது. 2011-ம் ஆண்டு இன்மொபி நிறுவனம் இந்தியாவின் முதல் யுனிகார்ன் நிறுவனமாக மாறியது. 100 நிறுவனங்களை தொடுவதற்கு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி இருக்கிறது.
சிறு நிறுவனங்களுக்கான நியோ பேங்கிங் பிளாட்பார்மை வழங்குகிறது ஓபன் நிறுவனம். சில நாட்களுக்கு முன்பு 5 கோடி டாலர் நிதி திரட்டியது. இதன் மூலம் 100 கோடி டாலர் சந்தை மதிப்பை கொண்ட நிறுவனமாக ஓபன் மாறி இருக்கிறது. கடந்த அக்டோபரில் நிதி திரட்டும்போது 50 கோடி டாலர் நிறுவனமாக இருந்தது. ஆறு மாதங்களில் ஒபன் நிறுவனத்தின் சந்தை மதிப்பு இரு மடங்காக உயரந்திருக்கிறது.
தற்போது சீரியஸ் டி முதலீட்டை திரட்டி இருக்கிறது. இதில் ஐஐஎப்எல் கணிசமான முதலீட்டை செய்திருக்கிறது. இதுதவிர டெமாசெக், டைகர் குளோபல் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன. கடந்த முறை நிதி திரட்டியபோது, கூகுள்,விசா, சாப்ட்பேங் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலீடு செய்திருந்தன.
2017 ம் ஆண்டு இந்த நிறுவனம் தொடங்கப்பட்டது. பேயு, சிட்ரஸ் பே ஆகிய நிறுவனங்களில் பணியாற்றிவர்கள் இணைந்து இந்த நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்கள். சிறு நிறுவனங்களுக்கு நடப்பு கணக்கு உள்ளிட்ட பல சேவைகளை இந்த நிறுவனம் வழங்குகிறது.
இந்த யுனிகார்ன் நிறுவனத்தில் இரு பெண் நிறுவனர்கள் உள்ளனர். 2021-ம் ஆண்டு இந்தியாவில் 44 யுனிகார்ன் நிறுவனங்கள் உருவாகின. 2022ம் ஆண்டு இதுவரையில் 16 யுனிகார்ன் நிறுவனங்கள் உருவாகி இருக்கின்றன. சர்வதேச அளவில் அதிக யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ள பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
2019ம் ஆண்டு கணிப்பு படி 2025ம் ஆண்டில்தான் இந்தியாவில் 100 யுனிகார்ன் நிறுவனங்கள் உருவாகும் என கணிக்கப்பட்டது. ஆனால் டிஜிட்டல் மாற்றம் காரணமாக விரைவாகவே இந்த எண்ணிக்கையை இந்தியா தொட்டுவிட்டது, தற்போதைய கணிப்புபடி 2025ம் ஆண்டு இந்தியாவில் 250 யுனிகார்ன் நிறுவனங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது உள்ள யுனிகார்ன் நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு 333பில்லியன் டாலர் என கணிக்கப்பட்டிருக்கிறது. இதில் பிளிப்கார்ட், சந்தை மதிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் பைஜூஸ் இருக்கிறது. 100 யுனிகார்ன் நிறுவனங்களில் 20 நிறுவனங்கள் பின் டெக் துறையை சார்ந்தவை. இகாமர்ஸ் துறையை சேர்ந்த 23 நிறுவனங்கள் யுனிகார்ன் நிலையில் உள்ளன.
பெங்களூருவில் மட்டும் 39 யுனிகார்ன் நிறுவனங்கள் உள்ளன. டெல்லியில் 29 நிறுவனங்கள் உள்ளன. மும்பையில் 15 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. தற்போது 100 யுனிகார்ன் நிறுவனங்கள் இருந்தாலும், 70க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விரைவில் யுனிகார்ன் நிலையை எட்ட இருக்கின்றன.