மோடி வருகைக்காக அடைத்து வைக்கப்பட்ட வாரணாசி பட்டியலின மக்கள்

மோடி வருகைக்காக அடைத்து வைக்கப்பட்ட வாரணாசி பட்டியலின மக்கள்
மோடி வருகைக்காக அடைத்து வைக்கப்பட்ட வாரணாசி பட்டியலின மக்கள்
Published on

பிரதமர் மோடியின் வாரணாசி வருகையின்போது பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதி பட்டியலின மக்கள் அடைத்து வைக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

உத்திரப்பிரதேச மாநில வாரணாசியின் கங்கை நதிக்கரையிலிருந்து காசி விசுவநாதர் ஆலயத்துக்கு எளிதாக செல்லும் வகையில் பிரம்மாண்ட சாலைக்கு நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது. இந்தச் சாலையானது 50 அடி அகலத்தில் ரூ.600 கோடி செலவில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது. இந்த விழாவில் கலந்துக் கொண்டு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி, மகளிர் தின விழாவிலும் நேற்று கலந்து கொண்டார். 

இந்நிலையில் பிரதமர் மோடியின் வருகையின் போது பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் அப்பகுதியில் வசிக்கும் 40க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்ப மக்களை, வீடுகளில் வைத்து காவல்துறையினர் அடைத்து வைத்ததாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு தங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வந்ததாகவும், சாலையில் சுதந்திரமாக நடமாடக்கூட முடியவில்லை என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்

பிரம்மாண்ட சாலை அமைப்பதற்காக அங்குள்ள மக்களின் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருவதாகவும், இதனை அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்த்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நேரத்தில் பிரதமர் மோடியின் வருகை அமைந்ததால் பதட்ட நிலையை கட்டுப்படுத்த போலீசார் மக்களை அடைத்து வைத்ததாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இது குறித்த ஒரு விரிவான பதிவை வீடியோ ஆதாரத்துடன் ‘நேஷனல் ஹெரால்ட்’ கட்டுரை வெளியிட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அப்பகுதி இளைஞர் ஒருவர், மோடி எங்களை பார்த்து அச்சப்படுகிறார். அதனால் தான் அவர் வரும் போதெல்லாம் எங்களை அடைத்துவைத்துவிடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் அப்பகுதி மக்கள் '' நாங்கள் பல தலைமுறைகளாக இதே பகுதியில் வசித்து வருகிறோம். இம்மண்ணின் மக்கள் நாங்கள். எங்களை அப்புறப்படுத்தவே இந்த அரசு யோசிக்கிறது. ஏற்கெனவே சாலை நீட்டிப்பு, கோயில் பராமரிப்பு எனப் பல இடங்கள் கையகப்படுத்தப்பட்டுவிட்டன. மீதி இடத்தையும் கையக்கப்படுத்தவே பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள்” என்று குற்றஞ்சாட்டியுள்ளனர்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com