ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு ஊழலில் அசோக் சவான் மீது குற்ற வழக்கு தொடர மாநில ஆளுநர் வித்யாசாகர் ராவ் வழங்கிய அனுமதியை, மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
போரில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்காக மும்பையின் கொலாபா பகுதியில் நிலம் ஒதுக்கப்பட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. ஆனால் வீரர்களுக்காக ஒதுக்குவதற்கு பதிலாக, அரசியல்வாதிகள் மற்றும் அமைச்சர்களுக்கு வேண்டிய நபர்களுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் எழுந்த அரசியல் குழப்பம் காரணமாக அப்போது முதலமைச்சராக இருந்த அசோக் சவான் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் அவருக்கு எதிராக புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக சிபிஐ கூறியதை அடுத்து, அசோக் சவான் மீது வழக்குத் தொடர ஆளுநர் வித்யாசாகர் ராவ் அண்மையில் அனுமதி அளித்தார். இதை எதிர்த்து அசோக் சவான் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், ஆளுநரின் அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதனால் சிபிஐயின் விசாரணைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.