ஐஐடி சென்னை உள்ளிட்ட 5 பல்கலைக் கழகங்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் ‘இன்ஸ்டிடியூசன்ஸ் ஆஃப் எமினென்ஸ்’ (Institutions of Eminence) என்ற தகுதியை அளித்துள்ளது.
உலக பல்கலைக்கழங்களில் தரவரிசையில் இந்திய பல்கலைக் கழங்கள் எதுவும் இடம்பெறாத நிலையில் மத்திய அரசு ‘இன்ஸ்டிடியூசன்ஸ் ஆஃப் எமினென்ஸ்’ என்ற தகுதியை கொண்டு வந்தது. இந்தத் தகுதியை பல்கலைக்கழகங்களுக்கு அளிக்க ஒரு சிறப்பு குழுவை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்தது. இந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் பல்கலைக்கழகங்களுக்கு இந்தச் சிறப்பு தகுதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தற்போது ஐஐடி சென்னை உள்ளிட்ட 5 பல்கலைக் கழகங்களுக்கு மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் இந்தச் சிறப்பு தகுதியை அளித்துள்ளது. ஐஐடி சென்னை, ஐஐடி கராக்பூர், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகம் உள்ளிட்ட 5 பல்கலைக்கழகங்கள் இந்தப் பட்டியில் தற்போது இடம் பெற்றுள்ளன.
‘இன்ஸ்டிடியூசன்ஸ் ஆஃப் எமினென்ஸ்’ என்ற தகுதியை பெரும் பல்கலைக்கழகங்கள் தங்களின் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்தை நிர்ணயிக்க சுதந்திரம் அளிக்கப்பட்டும். அத்துடன் இந்தப் பல்கலைக்கழகங்கள் அந்நிய நாட்டின் பல்கலைக்கழகங்களுடன் சேர்ந்து பணியாற்ற யுஜிசியின் அனுமதியை பெற தேவையில்லை. மேலும் இந்தத் தகுதியை பெரும் அரசாங்க பல்கலைக் கழகங்களுக்கு மட்டும் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் கூடுதலாக 1000 கோடி ரூபாய் நிதி உதவியை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.