நாட்டில் வீடில்லாமல் வசிக்கும் மக்கள் எப்படி ஆதார் அட்டை பெறுவார்கள் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவில் வசிக்கும் அனைவருக்கும் ஆதார் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மத்திய அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இந்த ஆதார் உலகிலேயே மிகவும் பாதுகாப்பான அடையாள அட்டை என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
இதனிடையே ஆதார் பாதுகாப்பானது அல்ல என்று கூறி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆதார் தகவல்கள் ரூ.500-க்கு கிடைக்கிறது என்பது உள்ளிட்ட பல்வேறு புகார்களும் எழுந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில், ஆதார் தொடர்பான பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணை நீதிபதிகள் மதன் பி லோகூர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் கொண்ட அமர்வு வந்தது. அப்போது, 90 கோடி பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுவிட்டதாக கூறும் மத்திய அரசு, வீடு இல்லாமல் தெருக்களில் வசிப்பவர்களுக்கு எவ்வாறு ஆதார் வழங்கும். முகவரி இல்லாத அவர்களுக்கு எவ்வாறு ஆதாரை வழங்குவீர்கள்?என்று கேள்வி எழுப்பினர். மேலும், ஆதார் அட்டை இல்லாமல் எப்படி சமூக நலத்திட்டங்கள் அவர்களுக்கு சென்றடையும் என்றும் நீதிபதிகள் மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பினர். ஆதார் இல்லாதவர்கள் மீது அரசுக்கு அக்கரை இல்லையா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 17,73,040 மக்கள் வீடில்லாமல் வசிக்கின்றனர். இதில் 52.9 சதவீதம் பேர் நகரத்திலும், 47.1 சதவீதம் பேர் கிராமப்புறங்களிலும் வசித்து வருகின்றனர்.