டெல்லிக்கு உத்தரப்பிரதேசம் வழியாகத்தான் செல்ல வேண்டும் என்ற வாசகம் இந்திய அரசியலில் மிகவும் பிரபலம். அம்மாநிலத்தின் அரசியல் முக்கியத்துவத்தை உணர்த்த இப்படிக்கூறப்பட்டது.
தேசிய அரசியலில் பாரதிய ஜனதா கட்சியின் எழுச்சிக்கு உத்தரப்பிரதேச மாநிலமே அடித்தளமாக அமைந்தது என்றால் அது மிகையல்ல.
பேரவை தேர்தல்களிலும் மக்களவைத் தேர்தல்களிலும் அங்கு பாஜகவே தொடர்ந்து வென்று வந்த நிலையில் அம்மாநில மக்கள் தற்போது பெரிய திருப்பத்தை தந்துள்ளனர். சமாஜ்வாதி, காங்கிரஸ் கணிசமான இடங்களில் பெற்ற வெற்றி தேசிய அளவில் பாஜக தனிப்பெரும்பான்மையை தொட இயலாமல் போனதற்கு முக்கியக் காரணமாக அமைந்தது.
யாரும் சற்றும் எதிர்பார்க்காத வகையில் வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் பிரதமர் மோடியே சில மணி நேரங்கள் பின் தங்கியிருந்தார்.
அமேட்டி தொகுதியில் கடந்த முறை ராகுல் காந்தியை வென்ற ஸ்மிருதி இரானியை வீழ்த்தி வியப்பை தந்தார் காங்கிரஸ் வேட்பாளர் கிஷோரிலால்.
அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியிலும் பாஜகவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாஜகவின் அரசியல் களத்தின் ஆதாரங்களில் ஒன்றாக அமைந்த அயோத்தியில் கிடைத்த முடிவு அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி பலமுறை பரப்புரை செய்தும் அவை வாக்குகளாக மாறத்தவறிய நிலையில் அவரது உரைகள், செயல்பாடுகள் மீதான மக்களின் தீர்ப்பாகவும் இம்முடிவுகளை பார்க்கலாம் என்கின்றனர் அரசியல் விமர்சர்கள். பாஜக வெல்ல முடியாத கட்சி அல்ல. சற்றே முயன்றால் அதுவும் சாத்தியம் என்பதை இம்முடிவுகள் உணர்த்துகின்றன என்கிறார் அரசியல் விமர்சகரான ஆழி செந்தில்நாதன்.
தொகுதி ஒதுக்கீட்டில் ஆரம்பத்தில் அதிருப்திகள் இருந்தாலும் பின்னர் சமாஜ்வாதியும் காங்கிரசும் இணைந்து மிகச்சரியான முறையில் பரப்புரையை கொண்டு சென்றன. குறிப்பாக வேட்பாளர் தேர்வில் அகிலேஷ் யாதவ் சாதுர்யமான காய் நகர்த்தல்களை மேற்கொண்டதும் இவ்வெற்றிகளுக்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.
வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகள் குறித்த எதிர்க்கட்சிகளின் பரப்புரையும் நல்ல பலனைத் தந்துள்ளதாகவே பார்க்கமுடிகிறது.
பாஜகவுக்கு மட்டுமல்லாமல் உத்தரப்பிரதேச அரசியலில் எப்போதுமே முக்கியத்துவம் பெற்று வந்த பகுஜன் சமாஜ் கட்சியும் இந்த முறை பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது கவனம் பெறுகிறது.