2021-2023 நிதியாண்டில் மட்டும் பிரதமர் மேற்கொண்ட 12 வெளிநாட்டு பயணங்களுக்கு 30 கோடி ரூபாய் மத்திய அரசு செலவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்ட தொடரின் மாநிலங்களவையில் உறுப்பினர் சிவதாசன், “2021 பிப்ரவரி மாதம் முதல் 2023 ஜூன் மாதம் வரை பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின் எண்ணிக்கை எவ்வளவு? அதற்கு செலவு செய்யப்பட்ட தொகை எவ்வளவு?” என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன், “2021 பிப்ரவரி மாதம் முதல் 2023 ஜூன் மாதம் வரையிலான காலகட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசம், அமெரிக்கா, இத்தாலி, வாடிகன் சிட்டி, இங்கிலாந்து, ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், நேபால், ஜப்பான், ஐக்கிய அரபு எமிரகம், உஷ்பகிஸ்தான், இந்தோனேசியா, பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா மற்றும் எகிப்து உள்ளிட்ட நாடுகளுக்கு 19 முறை அரசு முறை பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். இதற்கு மத்திய அரசு 30,80,47,075 ரூபாய் செலவு செய்துள்ளது” என தெரிவித்தார்.
இதேபோல கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு விளம்பர செலவுக்காக மட்டும் 2.7 ஆயிரம் கோடியை செலவு செய்துள்ளதாக மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் மாநிலங்களவையில் உறுப்பினர் சையத் நசீர் ஹுசைன், “கடந்த 5 ஆண்டுகளில் மத்திய அரசு, மத்திய அரசின் திட்டங்கள் குறித்த விளம்பரங்களுக்கு செய்த செலவின் தொகை எவ்வளவு” என நேற்றைய தினம் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மத்திய மின்னணு மற்றும் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், “அரசாங்கத்தின் கொள்கை மற்றும் திட்டங்களை வெளியிட மத்திய விளம்பரம் மற்றும் விளம்பரங்களுக்கான தகவல் தொடர்பு ஆணையம் 2018ம் ஆண்டு முதல் நடப்பாண்டு ஜூலை 13ம் தேதி வரை 2,713.72 கோடி ரூபாயை மத்திய அரசு செலவு செய்துள்ளது.
இதில் அதிகபட்சமாக, 2018-2019 நிதியாண்டில் 1106.88 கோடி ரூபாயை மத்திய அரசு செலவு செய்துள்ளது” என்றார்.