சிக்கலை வலுப்படுத்தும் மகாபஞ்சாயத்து... ஹரியானாவில் பிரிகிறதா பிஜேபி - ஜேஜேபி கூட்டணி?

சிக்கலை வலுப்படுத்தும் மகாபஞ்சாயத்து... ஹரியானாவில் பிரிகிறதா பிஜேபி - ஜேஜேபி கூட்டணி?
சிக்கலை வலுப்படுத்தும் மகாபஞ்சாயத்து... ஹரியானாவில் பிரிகிறதா பிஜேபி - ஜேஜேபி கூட்டணி?
Published on

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களில் முக்கியமானவர்கள் ஹரியானா விவசாயிகள். பெரும் எண்ணிக்கையிலான ஹரியானா விவசாயிகள் மத்திய அரசை எதிர்த்து களத்தில் இறங்கியுள்ளனர். இவர்களின் போராட்டம் பாஜக - ஜே.ஜே.பி கூட்டணியை அசைத்துப் பார்த்து வருகிறது.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஜே.ஜே.பி தலைவர் துஷ்யந்த் சவுதாலா தனது கட்சி நிர்வாகிகளுடன் சில நாட்களுக்கு முன்பு, ஒரு சந்திப்பை நடத்தினார். இந்தச் சந்திப்பில், அவரின் கட்சி எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் தங்கள் பகுதியில் விவசாயிகள் இயக்கத்தின் தாக்கம், மாநிலங்களுக்கு மக்கள் அணுகுமுறை போன்றவை குறித்து கருத்துக்கள் தெரிவித்துள்ளனர். அனைவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதேபோல் துஷ்யந்த் சவுதாலாவும் விவசாயிகளுக்கே ஆதரவு தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்தில் `விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்' என்றும், போர்க்கொடி தூக்கியுள்ள சவுதாலா, அதை செய்ய மறுத்தால் கூட்டணியை விட்டு வெளியேறுவேன் என பாஜகவை எச்சரித்து இருந்தார். ஆனால், அதன்பிறகு அமித் ஷா உட்பட சில மத்திய அமைச்சர்கள் அவரை சந்தித்து சமாதானம் செய்து பிறகு முடிவை மாற்றினார் துஷ்யந்த்.

ஆனால், தற்போது விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக நேற்று ஹரியானாவின் ஜிந்தில் ஒரு மகாபஞ்சாயத்துக்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் கூடியிருந்த கூட்டம், பாஜகவின் கூட்டணி ஆட்சியில் இருந்து ஜனநாயக் ஜனதா கட்சி (ஜேஜேபி) அரசாங்கத்தை விட்டு வெளியேற புதிய அழுத்தத்தை கொடுத்துள்ளது. கிராமப்புற ஜாட் சமூக மக்களை மையமாகக் கொண்ட கட்சி, ஜேஜேபி. ஜாட் சமூக மக்கள் பெரும்பாலும் தற்போது விவசாயிகள் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றனர்.

ஜனவரி 26 அன்று டெல்லியில் டிராக்டர் பேரணியில் நடந்த வன்முறைக்கு பிறகு விவசாயிகள் போராட்டம் துவண்டுவிடாமல், வெற்றிகரமாக புதுப்பித்தவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஜாட் சமூக விவசாய தலைவர் ராகேஷ் திக்கைட். இவருக்குப் பக்கபலமாக இருந்து காசிப்பூர் எல்லையில் குவிந்ததில் முக்கியப் பங்கு ஜாட் மகாபஞ்சாயத்து இயக்கங்களுக்கு உண்டு. ஹரியானா மாநிலத்தில் ஜிந்தில் உள்ள சர்வஜதியா (அனைத்து சாதி) மகாபஞ்சாயத்தும் தொடர்ந்து விவசாயிகளின் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

விவசாயிகளின் கிளர்ச்சிக்கு மகாபஞ்சாயத்து ஆதரவு வழங்குவது பாஜகவை கவலையடையச் செய்யும் அதேவேளையில், ஜாட் விவசாயிகள் அதிகளவு அவர்களின் பின்னால் இருப்பது கூடுதல் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. டிசம்பர் முதல், விவசாயிகளின் கிளர்ச்சிக்கு ஜாட் சமூகம் கொடுக்கும் பெரும் ஆதரவு பிஜேபி - ஜேஜேபி ஆட்சிக்கு கொடுக்கும் அழுத்தமாக பார்க்கப்படுகிறது.

ஹரியானா சட்டமன்றத்தில் உள்ள 10 ஜே.ஜே.பி எம்.எல்.ஏக்களில் குறைந்தது 6 பேர் ஏற்கெனவே விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவளித்துள்ளனர், அவர்களில் இருவர் சவுதாலாவுக்கு எதிராக தெளிவான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். கர்னாலில் உள்ள ஜே.ஜே.பி-யின் மாவட்டத் தலைவர் இந்தர்ஜித் சிங் கோரயா, சமீபத்தில் சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்கள் தொடர்பாக கட்சியிலிருந்து விலகினார்.

இந்த நெருக்கடிக்கு மத்தியில்தான் மகாபஞ்சாயத்துக்கள் கூடுதல் நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. விவசாயிகளின் நெருக்கடி தொடர்பாக பேசிய ஜே.ஜே.பி தலைவர் அஜய் சவுதாலா, விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் நடந்து வரும் பேச்சுவார்த்தையில் "சாதகமான முடிவு ஒன்று" வரும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.

தோஹானா நகரத்தைச் சேர்ந்த ஜே.ஜே.பி எம்.எல்.ஏ தேவேந்தர் சிங் பாப்லி கூறுகையில், ``விவசாயிகள் பிரச்னை கடந்த சில நாட்களாக தீவிரமடைந்துள்ளது, ஆனால், விரைவில் தீர்க்கப்படும். துஷ்யந்த் சவுதாலா இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்தார், இந்த விஷயத்தை தீர்ப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார். ஒரு வாரத்திற்குள், முழு விஷயத்திற்கும் ஒரு தீர்வு இருக்கும். இதில் நான் ஜே.ஜே.பியை முழுமையாக ஆதரிக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

இருப்பினும், காங்கிரசின் வற்புறுத்தலின் பேரில் சில கட்சிகள் தங்கள் கட்சியை புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்ட ஜூலானா நகரத்தைச் சேர்ந்த ஜே.ஜே.பி எம்.எல்.ஏ அமர்ஜீத் தண்டா, ``எனது தொகுதியில் என்னை புறக்கணித்த எந்த கிராமமும் இல்லை. கட்சி அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து துஷ்யந்த் சவுதாலா முடிவு செய்ய வேண்டும்" என்றும் பேசியிருக்கிறார்.

பிஜேபி - ஜேஜேபி தலைவர்களுக்கு தடை!

இதற்கிடையே, அண்மையில் ஹரியானா சட்டமன்றத்தில் தனி ஐ.என்.எல்.டி எம்.எல்.ஏ.வாக இருந்த அபய் சவுதாலா ராஜினாமா செய்ததும் ஜே.ஜே.பி மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது. மேலும், பாஜக மற்றும் ஜேஜேபி தலைவர்கள் கிராமத்திற்குள் நுழைவதை முற்றிலுமாக தடை செய்வதாக ஹரியானாவில் பல கிராமங்கள் அறிவித்துள்ளன. அதேபோல் தனிப்பட்ட கிராமங்கள் போராட்டத்தை ஆதரிக்க தீர்மானித்துள்ளன.

ஜாட் சமூகத்தை போன்றே காப் சமூக மக்களும் பாஜக மற்றும் ஜேஜேபி தலைவர்களையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். இருந்தபோதிலும், துஷ்யந்த் சவுதாலா அரசாங்கத்திலிருந்து ராஜினாமா செய்யவில்லை. மாறாக, விவசாயிகளின் விளைபொருள்கள் குறைந்தபட்ச ஆதரவு விலையில் (எம்.எஸ்.பி) மாற்றம் கொண்டுவந்தால் ராஜினாமா செய்வேன் என போராட்டத்தின் முதல்நாளில் இருந்து சவுதாலா கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இந்த விஷயத்தில் ஜேஜேபி தன் மீது இருக்கும் அழுத்தத்தில் என்ன முடிவு எடுக்க போகிறது என்பது தற்போதைய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

- மலையரசு

தகவல் உறுதுணை: The Print

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com