போட்டி நிறுவனங்களே இல்லாமல் பண்ண ஜியோ... இப்போது திக்குமுக்காடும் இந்திய தொலைத்தொடர்புத் துறை!

140 கோடி மக்கள் தொகை உள்ள இந்தியாவில் தற்போது 120 கோடி செல்போன் இணைப்புகள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்நிலையில், இந்தியத் தொலைத் தொடர்புத் துறையின் தற்போதைய நிலை என்ன? சந்தையில் ஆதிக்கம் செலுத்துவது யார்? தெரிந்து கொள்ளலாம்.
மொபைல் ரீச்சார்ஜ் - சந்தை மதிப்பு
மொபைல் ரீச்சார்ஜ் - சந்தை மதிப்புகோப்புப்படம்
Published on

செய்தியாளர் - கௌசல்யா

ரீசார்ஜ் கட்டணங்களை 3 தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும் உயர்த்தி அறிவித்ததுதான் இன்று ஹாட் டாபிக்.. அரிசி, காய்கறி, மளிகை என அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஒருபுறம் என்றால் மொபைல் போன்கள் கட்டணம் அதிகரிப்பும் மாத பட்ஜெட்டில் கூடுதல் சுமை.

ஆனாலும் மொபைல் ஃபோன்கள் இன்றிமையாகிவிட்டதால் எவ்வளவு கட்டண உயர்வு என்றாலும் அதைப் பயன்படுத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக புலம்புகின்றனர். சரி, கட்டணங்களை உயர்த்தியுள்ள இந்நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு என்ன?

ரிலையன்ஸ் ஜியோ - ஏர்டெல் - வோடஃபோன் ஐடியா - பி.எஸ்.என்.எல்.

பாதியளவிற்கு சந்தைபங்களிப்பை கொண்டுள்ளது ரிலையன்ஸ் ஜியோ. வயர்லெஸ் டெலிகாம் வாடிக்கையாளர்களில் ஜியோ 40.48 சதவிகிதமும், ஏர்டெல் 33.12 சதவிகிதமும், வோடஃபோன் ஐடியா 18.77 சதவிகிதமும் சந்தைமதிப்பை கொண்டுள்ளன. ஒரு காலத்தில் மூலைமுடுக்குகளில் எல்லாம் சேவையை வழங்கி வந்த இந்திய அரசுக்குச் சொந்தமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தற்போதைய சந்தைபங்களிப்பு வெறும் 7.46 சதவிகிதம் மட்டுமே.

தனியார் துறையின் ஆதிக்கம்!

டெல்லி, மும்பையில் மட்டும் சேவை தந்து வரும் எம்.டி.என். எல்லின் சந்தை பங்கு ஒரு சதவிகிதத்திற்கும் குறைவுதான். இதிலிருந்தே தெரிந்திருக்கும் இந்தியாவின் தொலைத் தொடர்புத்துறையில் ஆதிக்கம் செலுத்துவது தனியார் துறைதான் என்று. ரிலையன்ஸ் குழுமம் ஒரு துறையில் கால் எடுத்து வைக்கிறது என்றாலே போட்டி நிறுவனங்கள் அச்சத்தில் உறைய தொடங்கிவிடுகின்றன.

ரிலையன்ஸ் குழுமம் - Jio
ரிலையன்ஸ் குழுமம் - Jio

ஜியோவின் வளர்ச்சி!

அதேபோலத்தான், 2016ஆம் ஆண்டு தொலைத் தொடர்புத்துறையில் ஜியோ கால்பதித்ததும். எல்லோரும் எதிர்பார்த்ததுபோல பல மாதங்கள் இலவச அழைப்பு, இணைய சேவையை வழங்கியது ஜியோ. அதற்கு கிடைத்த விளைவு... இன்று சந்தையில் நம்பர் ஒன்னாக வலம் வருகிறது. சுமார் 15 ஆண்டுகளாக தொலைத்தொடர்பு சேவையில் நம்பர் ஒன்னான இருந்துவந்த ஏர்டெல் 2018ஆம் ஆண்டு, அந்த இடத்தில் இருந்து சறுக்கியதும் இதனால்தான்.

10 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் ஒரு டஜன் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் சேவையை வழங்கி வந்தன. ஏர்டெல், வோடோஃபோன், ஐடியா, பிஎஸ்என்எல், எம்டிஎன்எல், வீடியோகான், சிங்டெல், எம்டிஎஸ், ஏர்செல், டெலிநார், டாடா டோகோமோ, ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் என இத்தனை நிறுவனங்கள் தொலைத்தொடர்பு சேவையை வழங்கிவந்தன.

இதனால் கட்டணத்தை உயர்த்துவதில் கடும் போட்டி நிலவியது. வாடிக்கையாளர்களை இழக்கக்கூடும் என்ற அச்ச உணர்வு நிறுவனங்களிடம் இருந்தது. ஆனால், தற்போதோ நிலைமை தலைகீழாகிவிட்டது. ரிலையன்ஸ் ஜியோவில் அதிரடி சலுகைகளால் தாக்குப்பிடிக்க முடியாமல் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் திணறின.

விளைவு, இந்தியத் தொலைத்தொடர்புத்துறையில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு தற்போது 4 நிறுவனங்கள் மட்டுமே உள்ளன. அதிலும், பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்-லின் பங்களிப்பு 10 சதவிகிதத்திற்கும் குறைவே. தேவையில்லாதவர்களும் டேட்டாவுடன் கூடிய அன்லிமிடெட் ரீசார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயம்.

பின்தங்கும் BSNL!

தனியார் நிறுவனங்கள் 5ஜி தொழில்நுட்பத்தில் ஆதிக்கம் செலுத்தும் இந்தவேளையில், பி.எஸ்.என்.எல் இப்போதுதான் 4ஜி தொழில்நுட்பத்தை அதுவும் குறிப்பிட்ட இடங்களுக்கு மட்டும் அறிமுகம் செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கிறது.

ஆரோக்கியமான போட்டி நிலவும்போது மட்டுமே பொதுமக்களுக்கு குறைந்தவிலையில் சேவையை வழங்கமுடியும். காலமாற்றத்தை பொதுத்துறை நிறுவனங்களுக்கும் அரசு காலத்தோடு செய்திருந்தால் இதுபோன்ற விலை உயர்வுகளால் மக்கள் அவதிப்படுவதை தடுக்க முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com