கொரோனா பிடியிலிருந்து எப்படி மீள்கிறது கேரளா? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்கள்..!

கொரோனா பிடியிலிருந்து எப்படி மீள்கிறது கேரளா? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்கள்..!
கொரோனா பிடியிலிருந்து எப்படி மீள்கிறது கேரளா? ஆச்சர்யப்பட வைக்கும் தகவல்கள்..!
Published on

உலகமே அதிர்ந்து நடுங்கி கொண்டிருக்கும் கொரோனாவிலிருந்து மீள கேரள அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரைத்தொகுப்பு..

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் முதல் மாநிலமாகக் கேரளாவாக இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். உலகம் அதிர்ந்து நடுங்கிக் கொண்டிருக்கும், கொரோனாவின் முதல் அடியைத் தான் வாங்கினாலும் கேரளா அதற்கு அஞ்ச வில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதற்குச் சான்றுதான் இன்றைய கேரளம். அனைத்து மாநிலங்களும் கொரோனா பரவலைத் தடுக்க போராடி வரும் இந்த சூழ்நிலையில், கேரளா கொரோனா பாதிப்பிலிருந்து, படிப்படியாக மீண்டு வந்து கொண்டிருக்கிறது. வல்லரசு நாடுகளே கொரோனாவை கையாள திக்குமுக்கு ஆடி கொண்டிருக்கும் போது, கேரளா மட்டும் கொரோனாவை எப்படி விரைவாக கையாண்டது? எப்படி அவர்களுக்கு இது சாத்தியமானது? என்பதை விளக்குகிறது இந்தக் கட்டுரை தொகுப்பு.

இந்தியாவிலேயே முதன் முதலாக கொரோனா வைரஸ் பாதிப்பு என்பது உறுதி செய்யப்பட்ட மாநிலம் கேரளா. ஜனவரி 30ம் தேதி சீனாவிலிருந்து வந்த திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது மருத்துவக் கல்லூரி மாணவிக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மாணவியுடன் வந்த 20 பேரும் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதனையடுத்து கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டம் ராணி பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து கேரளாவிற்குச் சுற்றுலா வந்த இத்தாலி நாட்டினருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

கொரோனாவின் ஆபத்தை உணர்ந்த கேரளா, கொரோனாவுக்கு எதிரான தனது போராட்டத்தைத் துவங்கியது. முதற்கட்டமாக இத்தாலியிலிருந்து கேரளா மாநிலத்திற்குச் சுற்றுலா வந்தவர்களின் பட்டியலைத் தயார் செய்தது. இந்தப் பட்டியலில் 3,500 நபர்கள் இடம்பெற்றிருந்தனர். உடனடியாக காவல் துறையினரின் உதவியுடன் அவர்கள் அனைவரும் மருத்துவக் கண்காணிப்பில் கீழ் கொண்டு வரப்பட்டனர். அத்தோடு நிற்க வில்லை. விமான நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விடுத்ததுடன், பத்தனம் திட்டா மாவட்டத்திற்கு “சீல் வைக்கப்பட்டது.

மேலும் காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட கொரோனா அறிகுறிகள் உள்ள நபர்கள் அனைவரையும் அழைத்து அவர்கள் அனைவரும் மருத்துவ கண்காணிப்பிற்குக் கீழ் கொண்டு வரப்பட்டனர். இவர்களுக்கென பிரத்யேகமாக எர்ணாகுளம், கோட்டயம் மருத்துவக் கல்லூரிகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டன. ஆபத்து அதிகமாகிக் கொண்டிருப்பதை உணர்ந்த கேரள அரசு உடனடியாக மாநிலத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களையும் மூடியது. எல்லைப்பகுதிகளில் கண்காணிப்பை பலப்படுத்தி வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. மக்களுக்கும் கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, நோயின் தன்மை குறித்து ஆராய ஆலோசனைகளும் நடத்தப்பட்டன. இந்த முயற்சிகளின் இறுதிக்கட்டத்தில் மொத்தம் 32 ஆயிரம் நபர்கள் மருத்துவ கண்காணிப்பின் கீழ் வந்திருந்தனர். 237 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது.

உடனடியாக கொரோனா நோய்த்தடுப்பிற்காக 20 ஆயிரம் கோடி ரூயாயை ஒதுக்கி பணிகளை முடிக்கவிட்டது கேரள அரசு. இந்த நடவடிக்கை அனைத்து மாநிலங்களையும் ஆச்சரியப்பட வைத்தது. முதற்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளிட்டோருக்கு விலை உயர்ந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. அத்துடன் மாநிலம் முழுவதும், உள்ள அனைத்துத் தனியார் மருத்துவமனைகளும் திறக்கப்பட்டன.

இவை தவிர மாநிலத்தின் அனைத்து ஊராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் கொரோனா தடுப்பு குழு அமைக்கப்பட்டது. அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு பகுதிகளில் வார்டு உறுப்பினர்களின் தலைமையில் கொரோனா ஒழிப்பு வார்டு கமிட்டிகளும் உருவாக்கப்பட்டன. இந்த குழுக்கள் மூலம் வெளி நாட்டிலிருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள், உள்ளூர் வாசிகள் என அனைவரும் அடையாளம் காணப்பட்டனர். புதிதாக வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் அப்படியே அழைத்துச் செல்லப்பட்டு 20 நாட்கள் கட்டாய மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

ஆதரவற்றோர், பாதுகாப்பு இல்லாதவர்கள் ஆகியோரை கவனிக்க, ஆளுங் கட்சியினர் தன்னார்வலர்களுடன் இணைந்து பணியாற்றினர். இதன் மூலம் அவர்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டனர். அவர்களுக்கு பிரத்யேகமாக “கம்யூனிட்டி கிச்சன்கள்” துவக்கப்பட்டு அவர்களுக்குத் தேவையான உணவுகள் தங்கும் இடத்திற்கே கொண்டு சென்று கொடுக்கும் முறை அமல்படுத்தப்பட்டது. இது மட்டுமல்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச ரேஷன், அத்தியாவசிய பொருட்களின் தொகுப்பு, உதவித்தொகைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்த தொடர் நடவடிக்கைகள் மூலம் பிரதமர் அறிவிக்கும் முன்னரே கேரளாவில் ஊரடங்கு அமலானது.

அரசின் நடவடிக்கைகள் ஒருபுறம் சீராக நடைபெற்றாலும், இவை அனைத்தும் வெற்றி பெற்றதற்கான ஒரே காரணம், கேரள மக்களின் அளப்பரிய ஒத்துழைப்பு. அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் ஊரடங்கு வழிமுறைகளையும் கேரள மக்களின் வாழ்க்கை முறையும் பின்னிப்பிணைந்து அமைந்திருந்தது.பொதுவாகக் கேரள மக்களுக்கு ஊரடங்கு புதிய விஷயமில்லை. கேரள மாநிலத்தில் நள்ளிரவில் “பந்த்”அறிவிக்கப்பட்டாலும் அதற்கு முழு ஆதரவு கேரள மக்களிடம் இருக்கும். மாலை வேளைகளில் தோட்டங்களில் உள்ள வேலையை பார்த்து முடிக்கும் அவர்கள், 8 மணி மணிக்கு இரவு உணவை உண்டு விட்டு 9 மணிக்கெல்லாம் படுக்கைக்குச் சென்று விடுவர். பேருந்துகள் இயக்கமும் இருக்காது.

கேரள மக்களின் மற்றொரு வழக்கம், அவர்களுக்கு ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை மொத்தமாக வாங்கி வைத்துக் கொள்வது. இந்த நடைமுறையைக் கேரள மக்கள் நெடுங்காலமாகக் கடைப் பிடித்து வருகின்றனர். இதில் மற்றொரு குறிப்பிடத்தக்க விஷயம், அத்தியாவசிய தேவைகளான தேங்காய், சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, பூண்டு, புளி உள்ளிட்ட கெட்டுப்போகாத காய்கறிகளை ஒரு மாதத்திற்கு இருப்பு இருக்கும் வகையில் வாங்கிக் கொள்வர். ஒரு வேளை காய்கறிகள் வாங்க முடியவில்லை என்றாலும் வீட்டு முற்றத்திலும், தோட்டத்தின் சிறிய பரப்பிலும் தவறாது பயிரிடப்பட்டுச் இருக்கும் கீரை வகைகள், பச்சை மிளகாய், பீன்ஸ், வெண்டை, பாகற்காய், அவரை, சேனை, சேம்பு என எதையாவது பறித்து அடுத்த வாரம் வரை சமாளிக்கும் வசதிகளும் அவர்களிடத்தில் உண்டு. முக்கியமாகப் பலாக்காயின் சுளையை பல்வேறு வகைகளில் தயாரித்து ஒரு குடும்பத்தின் முழு நேரப் பசியை போக்கவும் அவர்கள் கற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

கேரளாவின் மற்றொரு சிறப்பம்சம் பெரும்பான்மையான வீடுகள் தனித்தே இருக்கின்றன. மேலும் படித்தவர்கள் அதிகமுள்ள பகுதி என்பதால் கொரோனா குறித்த நடவடிக்கைகள் விழிப்புணர்வுடன் பின்பற்றப்பட்டது. இதனால் சமூக இடைவெளி என்பது எளிமையாக கடைப்பிடிக்கப்பட்டது.

அதே போலக் கேரள மக்களின் உடலைப் பராமரிக்கும் குணமும் கொரோனாவை எதிர்க்க பெரும் பங்கு வகித்தது. பொதுவாகக் கேரளர்கள் வெளியே வரும் போது அவர்களின் தோற்றத்தை வைத்து ஏழை, பணக்காரன் என்று எடை போட்டு விட முடியாது. அந்த அளவிற்கு தினக்குளியல், மிடுக்கான ஆடை, உடலில் எண்ணெய் தேய்த்து பாராமரித்தல், செருப்புகளைக் கூட தூய்மையாக வைத்தல் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்துவார்கள். அதில் கைகளை அடிக்கடி கழுவுதல் மிக முக்கியமான ஒன்று.

அதே போல உணவு பாரம்பரியத்திலும் கேரளர்கள் வேறுபட்டுக் காணப்படுகின்றனர். கேரளா என்றாலே “கடின” உணவு என்று எல்லோரும் சொல்வதுண்டு. அந்த வகையில் காலையில் அப்பம், பரோட்டாவிற்குக் கூட முட்டை, இறைச்சி. மதியம் பொறியல், மீன், இறைச்சியோடு ”குத்தரிசி” சாப்பாடு, மாலைக்கு ஏதாவது அவித்த கிழங்கு இரும்புச்சத்து கொண்ட ”நேந்திரன்” பழம், இரவு செரிக்கும் கஞ்சியும் காய்கறிகள். இவை இயல்பாகவே கேரள மக்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும், நோய் எதிர்ப்புச் சக்தியையும் அளிப்பவையாக உள்ளன.

கொரோனாவில் கேரளா மீண்டு வருவதற்கு அரசின் நடவடிக்கைகள் முக்கிய பங்கு வகித்தாலும், மருத்துவத்துறையின் தன்னலமற்ற சேவை, பொதுமக்களின் ஒத்துழைப்பு, நோயின் தன்மை குறித்த புரிதல், பராம்பரியத்தை பேணி பாதுகாத்தல் உள்ளிட்டவற்றையே கடவுளின் தேசத்தைக் காப்பாற்றி வருகிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.

பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 327.

குணமடைந்து வீடு திரும்பியோர் 214 பேர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com