மாநிலத்தில் ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும் போது, இடைத் தேர்தலோ உள்ளாட்சித் தேர்தலோ வந்தால் அதில் ஆளும் கட்சிதான் பெரும்பாலும் வெற்றி பெறும் என்பதுதான் பொதுக் கருத்து.
டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியில் இருக்கும் போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் அந்தக் கட்சி எப்படித் தோல்வியைத் தழுவியது?
டெல்லி ஒரு வித்யாசமான மாநிலம். அங்கு ஆம் ஆத்மி ஆட்சியில் இருந்தாலும், மத்திய அரசும் ஆட்சியில் இருக்கிறது என்றுதான் வைத்துக் கொள்ள வேண்டும். மற்றொரு விஷயம் உள்ளாட்சியைப் பொருத்தவரையில் ஏற்கனவே பாஜகதான் பதவியில் இருந்தது.
இந்த இரண்டு சாதகங்களைத் தவிர, ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லி மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தியையும் வெகு லாவகமாக பாஜக பயன்படுத்திக் கொண்டது.
டெல்லியில், வடக்கு, தெற்கு, கிழக்கு ஆகிய 3 மண்டல மாநகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் பாஜக, ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவியது. இந்தப் போட்டியில் வெற்றி பெற பாஜக ஒருசில வியூகங்களை வகுத்தது.
தேர்தல் நடைபெற்ற 272 வார்டுகளில், 267 வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்காக புது முகங்களை நிறுத்தியிருந்தது பாஜக. நிறுத்திய வேட்பாளர்களும் பதவியில் இருந்த பழைய உறுப்பினர்களின் உறவினர்களாகவும் இருக்கக் கூடாது என்பதில் கவனமாக இருந்தது பாஜக. இதன் மூலம், 10 வருடமாக டெல்லி மாநகராட்சியில் ஆட்சி செய்திருந்தாலும், ஆளும் கட்சிக்கு எதிரான மனப்பான்மையை பாஜகவால் எளிதாக சமாளிக்க முடிந்தது.
மாநிலத்தை ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளான பாதுகாப்பை அதிகரிக்க சிசிடிவி கேமரா பொருத்துவது, பொது இடங்களில் இலவச வைஃபை திட்டம் ஆகியன பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் முன்னிலை வகித்தது. ‘பிரதமர் மோடி கனவு காணும் டெல்லி’ என்று பிரச்சாரம் செய்து, மீண்டும் ஒரு மோடி அலையை உருவாக்கினார்கள் முக்கிய தலைவர்கள்.
ஆம் ஆத்மியைப் பொருத்தவரையில் ஆட்சிக்கு வந்த பிறகும் தங்கள் அரசின் சாதனைகளை முன்னிலைப்படுத்தாமல், மத்திய அரசை குறை கூறியே பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இதை டெல்லி மக்கள் ரசிக்கவில்லை என்கிறார்கள்.
மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உட்பட ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி எம்.எல்.ஏ-கள் பலரும் தற்போது ஆட்சி செய்யும் டெல்லியின் மேல் கவனம் செலுத்தாமல், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய மாநில தேர்தல்களில் அதிக கவனம் செலுத்தியது டெல்லி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.