பாரதிய ஜனதா கட்சி கடந்த 30 ஆண்டுகளாகவே இந்தியாவில் பெரிய அரசியல் சக்தியாக இருந்தாலும் தென்னிந்தியா மட்டும் அதற்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. தற்போதைய தேர்தலிலும் ஏறக்குறைய அதே நிலையே நீடிக்கிறது.
கர்நாடகாவில் கடந்த முறை 25 இடங்களில் வென்ற பாஜக இம்முறை 17 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. தெலங்கானாவில் கடந்த முறை 4 இடங்களில் வென்றிருந்த நிலையில் இம்முறை அது 8 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் இதற்கு முன் மக்களவை தேர்தல் வரலாற்றில் வெற்றியே சந்தித்திராத பாஜக இம்முறை ஓரிடத்தில் வென்றுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை கடந்த முறையை போல இம்முறையும் வெற்றி எதுவும் கிடைக்கவில்லை.
புதுச்சேரியிலும் இதே நிலைதான் நீடிக்கிறது. தென்னிந்தியாவில் கடந்த தேர்தலில் 29 இடங்களில் வென்றிருந்த பாஜக இம்முறை 26 இடங்களை வென்றுள்ளது. வாக்கு சதவீதத்தை பொறுத்தவரை பாஜக முன்னேற்றம் கண்டுள்ளதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.
கர்நாடகாவில் பாஜக வாக்கு சதவீதம் 51.75இல் இருந்து 46.06 ஆக சரிந்துள்ளது. எனினும் தெலங்கானாவில் இது 19.45இல் இருந்து 35.08 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் பாஜக வாக்கு சதவீதம் 13இல் இருந்து 16.68 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் பாஜக வாக்கு சதவீதம் 3.66இல் இருந்து 11.24 ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் பாஜக வேட்பாளர் இம்முறை 35.81% வாக்குகள் பெற்றுள்ளார். ஆனால் கடந்த முறை பாஜகவின் கூட்டணி கட்சிதான் அங்கு களம் கண்டது. தென்மாநிலங்களில் கடந்த முறையை விட இம்முறை தொகுதிகள் சற்றே குறைந்திருந்தாலும் வாக்கு சதவீதம் ஓரளவு உயர்ந்திருப்பதை புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.