தடைகளை தகர்த்தெறிந்து சாதனை - ஆம் ஆத்மி பஞ்சாபை வசப்படுத்திய கதை!

தடைகளை தகர்த்தெறிந்து சாதனை - ஆம் ஆத்மி பஞ்சாபை வசப்படுத்திய கதை!
தடைகளை தகர்த்தெறிந்து சாதனை - ஆம் ஆத்மி பஞ்சாபை வசப்படுத்திய கதை!
Published on

உத்தரபிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டன. வழக்கமாக இதுபோன்ற சமயங்களில், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் தேர்தல் முடிவுகள் பற்றிதான் நாடே பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கும். ஆனால், இந்த முறை தேர்தல் கதாநாயகனாக மாறியிருப்பது பஞ்சாப் மாநிலம் தான். உத்தரபிரதேசத்தில் பெரும்பாலானோர் கணித்தது போலவே ஆட்சியை தக்க வைத்திருக்கிறது பாஜக. எதிர்பார்த்தது நடந்துவிட்டால் என்ன சுவாரசியம் இருந்துவிடப் போகிறது என்பதாலோ என்னவோ, உத்தரபிரதேச தேர்தலையும் தாண்டி நாடு முழுவதும் பெரும் பேசுப்பொருளாகவும், விவாதப்பொருளாகவும் மாறியிருக்கிறது பஞ்சாப் தேர்தல் முடிவு. அதற்கு காரணமும் இருக்கிறது.

பஞ்சாபில் சுமார் 70 ஆண்டுக்காலம் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த காங்கிரஸையும், சிரோன்மணி அகாலி தளத்தையும் துடைத்தெறிந்து விட்டு கம்பீரமாக அரியணை ஏறி அமர்ந்திருக்கிறது ஆம் ஆத்மி. மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக ஆம் ஆத்மி உருவாகி இருக்கிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட ஒரு கட்சி, நாட்டின் தலைநகரில் ஆட்சியை பிடித்ததுடன் மட்டுமல்லாமல், அதன் அண்டை மாநிலத்திலும் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது இந்தியாவை பொறுத்தவரை ஒரு சரித்திர சாதனை என்றே சொல்ல வேண்டும். அந்த சாதனையை சத்தமே இல்லாமல் செய்து முடித்திருக்கிறது ஆம் ஆத்மி. ஆனால், இந்த வெற்றி ஒன்றும் அக்கட்சிக்கு எளிதில் கிடைத்துவிடவில்லை. அதற்கு பின்னால் மிகப்பெரிய உழைப்பும், நேர்த்தியான திட்டமிடலும் இருந்திருக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மை.

ஊழலுக்கு எதிரான போராட்டக்களத்தில் உதயமான ஆம் ஆத்மி இயக்கம், ஒரு முழுமையான அரசியல் கட்சியாக மாறியது 2012-ம் ஆண்டில்தான். அதன் பிறகு ஒரே ஆண்டிலேயே தலைநகர் டெல்லியை கைப்பற்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஆனால் வந்த வேகத்திலேயே ஆட்சியில் இருந்து ஆம் ஆத்மி அகன்றது. டெல்லியில் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்க 'ஜன் லோக்பால்' அமைப்பை உருவாக்கும் தனது முயற்சி தோல்வி அடைந்ததால், அதிரடியாக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் அக்கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால். 'அரசியல் அனுபவமில்லாத ஒரு முன்னாள் அரசு அதிகாரியிடம் ஆட்சியை கொடுத்தால் இப்படிதான் நடக்கும்' என அந்த சமயத்தில் நாடே முணுமுணுத்தது. தான் செய்தது மாபெரும் தவறு என்பதை கேஜ்ரிவாலும் ஒருசில நாட்களில் உணர்ந்தார்.

அதன் பிறகு, 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் டெல்லியிலும், அண்டை மாநிலமான பஞ்சாபிலும் களம் இறங்கியது ஆம் ஆத்மி. ஆனால், இந்த முறை ஆம் ஆத்மியை டெல்லி முழுமையாக புறக்கணித்தது. அங்குள்ள 7 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றை கூட அக்கட்சியால் கைப்பற்ற முடியவில்லை. அனைத்து தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்றது. அந்த சமயத்தில்தான் ஆம் ஆத்மிக்கும், பஞ்சாப் மாநிலத்துக்குமான அறிமுகம் ஆரம்பமாகிறது.

அந்த தேர்தலில் டெல்லி மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஆம் ஆத்மிக்கு 4 மக்களவைத் தொகுதிகளை பரிசாக வழங்கினர் பஞ்சாப் மக்கள். உண்மையிலேயே இந்த வெற்றியை ஆம் ஆத்மியும், அர்விந்த் கேஜ்ரிவாலுமே கூட எதிர்பார்க்கவில்லை. அப்போதுதான் பஞ்சாப் மாநிலம், மாற்று அரசியலுக்காக பல ஆண்டுகளாக ஏங்கிக் கொண்டிருக்கிறது என்கிற உண்மை கேஜ்ரிவாலுக்கு தெரியவந்தது. சிறிதும் தாமதிக்காமல், டெல்லியை போல பஞ்சாபிலும் அடிமட்டத்தில் இருந்து ஆம் ஆத்மியை வலுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார் கேஜ்ரிவால். உண்மையை சொல்லப்போனால், அன்றைக்கு பஞ்சாப் அளித்த உத்வேகம்தான் அர்விந்த் கேஜ்ரிவாலை மீண்டும் தீவிர அரசியலில் இறங்கச் செய்தது. டெல்லியில் ஆட்சியை ராஜினாமா செய்ததற்காக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் கேஜ்ரிவால். இனி ஒரே ஒரு முறை மட்டும் வாய்ப்பு தாருங்கள் என டெல்லியில் வீடு வீடாக சென்று ஆம் ஆத்மி பிரச்சாரம் செய்தது. கேஜ்ரிவாலின் அந்த அணுகுமுறை நல்ல பலனையும் கொடுத்தது. 2015-ம் ஆண்டு டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது ஆம் ஆத்மி. ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த கேஜ்ரிவால், மத்திய அரசு தந்த இடையூறுகளையும் மீறி டெல்லியில் அற்புதமான ஆட்சியை வழங்கினார். டெல்லி மக்கள் இதுவரை கண்டிராத ஊழலற்ற ஆட்சியாக அது இருந்தது மட்டுமல்லாமல், அரசு இயந்திரத்தில் இருந்த ஊழல்வாதிகளும் தயவு தாட்சண்யமின்றி களையெடுக்கப்பட்டனர்.

டெல்லியில் அப்போது ஆம் ஆத்மி அரசு செயல்பட்ட விதம் பஞ்சாப் மக்களை பெரிதும் கவர்ந்தது. காலங்காலமாக ஊழல் ஆட்சியையும், அலட்சியமான நிர்வாகத்தையும் கண்டு வெதும்பிய பஞ்சாப் மக்களுக்கு, ஆம் ஆத்மி ஒரு புதிய நம்பிக்கையை தந்தது என்றால் அது மிகையல்ல. ஆம் ஆத்மியும் இதனை புரிந்துகொண்டு, 2017-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக பஞ்சாபில் தீவிர களப்பணி ஆற்றியது. அதே சமயத்தில், ஆளும் சிரோன்மணி அகாலி தளமும், எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸும் ஆம் ஆத்மியை மக்கள் முன்பு எதிர்மறையாக பிம்பப்படுத்தின. கேஜ்ரிவாலை 'காலிஸ்தான் ஆதரவாளர்' என அவர்கள் குற்றம்சாட்டினர். மேலும், வேறு மாநிலத்தைச் சேர்ந்த கட்சி பஞ்சாபில் ஆட்சியமைக்க வருவதா என்று கூறி மக்களின் இனவாத உணர்வையும் அவை தூண்டிவிட்டன. இத்தனை அவதூறுகளையும் தாண்டி, தேர்தலை சந்தித்தது ஆம் ஆத்மி. யாரும் எதிர்பாராவிதமாக முதல் தேர்தலிலேயே பஞ்சாபில் 20 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியது. அதுமட்டுமல்லாமல், சிரோன்மணி அகாலி தளத்தை பின்னுக்கு தள்ளி, 'பிரதான எதிர்க்கட்சி' என்ற அந்தஸ்தையும் ஆம் ஆத்மி பிடித்தது. ஒருவேளை, முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்தி இருந்தால் அந்த தேர்தலிலேயே ஆம் ஆத்மி வெற்றி பெற்றிருக்கும் என்பது அரசியல் நிபுணர்களின் கருத்தாக இருந்தது.

அடுத்தடுத்த சறுக்கல்கள்

எல்லாம் சரியாக போய்க் கொண்டிருந்த வேளையில், அடுத்து வரும் மூன்று ஆண்டுகள் (2017- 2020), ஆம் ஆத்மிக்கு பெரும் சறுக்கல்களையும், தடைகளையும் தரப்போகிறது என நிச்சயம் யாரும் எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்கள். ஆம் ஆத்மியின் இந்த அசுர வளர்ச்சி, தேசியக் கட்சிகளான பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் கிலியை ஏற்படுத்துவதாக இருந்தது. ஆம் ஆத்மிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் ஒரே பலம், அது ஊழலை ஒருபோதும் சகித்துக் கொள்ளாத கட்சி என்பதுதான். இதனை புரிந்துகொண்ட எதிர்க்கட்சிகள், முதலில் அந்தப் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதற்கு சதித்திட்டங்களை தீட்டின. விளைவு, ஆம் ஆத்மி அரசு மீது பல ஊழல் குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக சுமத்தப்பட்டன. 'ஆம் ஆத்மி ஒன்றும் வானத்தில் இருந்து குதித்த அரசியல் கட்சி அல்ல; வாய்ப்பு கிடைத்தால் அதுவும் ஊழல் செய்யும்' என சித்தரிப்பதுதான் எதிர்க்கட்சிகளின் பிரதான முயற்சியாக இருந்தது. அதற்கு கை மேல் பலனும் கிடைத்தது. ஆம் ஆத்மியை டெல்லி மக்கள் சந்தேகிக்க தொடங்கினர். இதன் காரணமாக பஞ்சாபிலும் ஆம் ஆத்மிக்கு எதிரான அலை வீச ஆரம்பித்தது. அந்த சமயத்தில் பஞ்சாபில் நடைபெற்ற சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி படுதோல்வியை சந்தித்தது. 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. அந்த தேர்தலில் டெல்லியில் அனைத்து தொகுதிகளிலும் மீண்டும் ஆம் ஆத்மி தோல்விக் கண்டது.

தங்களின் எண்ணம் ஈடேறிவிட்ட போதிலும், ஆம் ஆத்மியை இத்துடன் விட்டுவிடுவதற்கு எதிர்க்கட்சிகளுக்கு மனம் இல்லை. டெல்லியில் செய்ததை போலவே பஞ்சாபிலும் அதன் அடித்தளத்தை அசைத்து பார்க்க முடிவெடுத்த எதிர்க்கட்சிகள், அந்த மாநிலத்தில் இருந்த மக்கள் செல்வாக்குமிக்க ஆம் ஆத்மி தலைவர்களை தங்கள் பக்கம் இழுக்க தொடங்கினர். ஆட்சி அதிகாரத்துக்கு ஆசைப்பட்டவர்கள் ஆளுங்கட்சியிலும், பணத்துக்கு விலைப் போனவர்கள் எதிர்க்கட்சிகளிலும் இணைந்தனர். முடிவு, பஞ்சாபில் ஆம் ஆத்மியின் முகாம் ஒருகட்டத்தில் காலியாகி போனது. டெல்லியிலும், பஞ்சாபிலும் ஆம் ஆத்மிக்கு ஏற்பட்ட நிலைமை, கேஜ்ரிவாலுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தாலும் அவர் மனம் சோர்வடையவில்லை. மக்கள் மீது தான் வைத்திருந்த நம்பிக்கையையும் அவர் இழக்கவில்லை.

ஆட்டத்தை மாற்றிய கேஜ்ரிவால்...

தொடர் தோல்விகளுக்கும், சறுக்கல்களுக்கும் என்ன காரணம் என யோசித்த அர்விந்த் கேஜ்ரிவால், தனது அரசியல் ஆட்டத்தை வேறு மாதிரியாக ஆட முடிவெடுத்தார். அதுவரை பாஜகவையும், பிரதமர் நரேந்திர மோடியையும் கடுமையாக வசைப்பாடி வந்த அவர், அதனை முழுமையாக நிறுத்தி, டெல்லி அரசு நிர்வாகத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். மிக முக்கியமாக, பாஜகவின் இந்துத்துவ அரசியலுக்கு எதிராக பேசுவதை முற்றிலுமாக கைவிட்டார். மேலும், கோயில் வழிபாடுகளை அவர் வெளிப்படையாக செய்ய தொடங்கினார்.

இதன் மூலமாக, 'இந்து மக்களுக்கு ஆம் ஆத்மி விரோதி அல்ல' என்ற பிம்பத்தை மக்கள் முன்பு வலுவாக கட்டமைத்தார். அதற்கு பல தரப்பில் இருந்தும் பெரிய அளவில் வரவேற்பும் கிடைத்தது. ஒருபுறம், டெல்லியில் புதிய புதிய வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி வந்த கேஜ்ரிவால், மறுபுறம் தன் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக தவிடுப்பொடியாக்கி மீண்டும் ஆம் ஆத்மியின் நேர்மையை மக்கள் முன்பு நிரூபித்துக் காட்டினார். இவ்வாறு, தான் இழந்த மக்கள் செல்வாக்கை கேஜ்ரிவால் படிப்படியாக உயர்த்தினார். விளைவு, டெல்லி மறுபடியும் ஆம் ஆத்மியை கொண்டாட தொடங்கியது. அடுத்து வந்த 2020 டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பெரும் வெற்றியை பெற்றது. டெல்லியில் ஆம் ஆத்மிக்கு கிடைத்த வெற்றியானது, பஞ்சாபிலும் அக்கட்சிக்கு சாதகமான அலைகளை உருவாக்கியது.

பஞ்சாப் அரசியல்

இந்த தருணத்துக்காகவே காத்திருந்த கேஜ்ரிவால், மீண்டும் பஞ்சாபில் ஆம் ஆத்மியை அமைப்பு ரீதியாக பலப்படுத்த தொடங்கினார். 2022-ம் ஆண்டு பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை குறி வைத்து, அரசியல் காய்களை நகர்த்த தொடங்கியது ஆம் ஆத்மி. அந்த மாநிலத்தில் காங்கிரஸும், சிரோன்மணி அகாலி தளமும் வழக்கம் போல மாறி மாறி சேற்றை பூசி வந்த நிலையில், ஆம் ஆத்மியோ 'டெல்லி மாடல்' என்ற கோஷத்துடன் களம் இறங்கியது.

'பஞ்சாபில் ஊழலை வேரறுப்பதுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வளர்ச்சியை ஏற்படுத்துவதுதான் தனது பிரதான குறிக்கோள்' என அர்விந்த் கேஜ்ரிவால் முழங்கினார். 'பஞ்சாபில் பன்னெடுங்காலமாக இருக்கும் போதைப்பொருள் கடத்தலை ஒழிப்போம்' என வாக்குறுதி அளித்தார். டெல்லியை போலவே அரசுப் பள்ளிகளில் தரமான கல்வியையும், அரசு மருத்துவமனைகளில் சர்வதேச தரத்திலான சிகிச்சையையும் வழங்குவோம் என ஆம் ஆத்மி பிரச்சாரம் செய்தது. அதேபோல, ஆட்சிப் பொறுப்பேற்றதும் விவசாயிகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதுதான் முதல் கையெழுத்தாக இருக்கும் என கேஜ்ரிவால் அறிவித்தது, விவசாய பெருங்குடிகளை வெகுவாக ஈர்த்தது. அனைத்துக்கும் மேலாக, பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்ற ஆம் ஆத்மியின் வாக்குறுதி, மகளிர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த முறை செய்த தவறை திருத்தும் விதமாக, முதல்வர் வேட்பாளரை முன்கூட்டியே ஆம் ஆத்மி அறிவித்தது. அதுவும், ஒரு செல்போன் எண்ணை மக்களிடம் கொடுத்து, 'நீங்கள்தான் உங்கள் முதல்வர் வேட்பாளரை பரிந்துரைக்க வேண்டும்' என ஆம் ஆத்மி கூறியது, மக்களை அக்கட்சிக்கு மிக நெருக்கத்தில் கொண்டு வரச் செய்தது. அதன்படியே மக்கள் பரிந்துரைத்த பகவந்த் மான் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டார்.

இந்த முறையும் கேஜ்ரிவாலை காலிஸ்தான் ஆதரவாளர் என்றும், வெளிமாநிலத்தவர் எனவும் எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்தன. ஆனால், ஆம் ஆத்மியின் 'டெல்லி மாடல்' பிரச்சாரம் அவை அனைத்தையும் நிர்மூலமாக்கியது. இவ்வாறு அடுத்தடுத்து வந்த தடைகளை தகர்த்தெறிந்த ஆம் ஆத்மி, தற்போது பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று வரலாற்று சாதனையை படைத்திருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பஞ்சாபில் அக்கட்சி பெற்ற வெற்றியானது, ஆம் ஆத்மியை தேசிய அரசியலின் மையப் புள்ளிக்கு அருகே நகர்த்தியுள்ளது. 2024 மக்களவைத் தேர்தலில் மாற்று எதிர்க்கட்சி அணிக்காக திரிணாமுல், டிஆர்எஸ் போன்ற கட்சிகள் ஆர்ப்பாட்டத்துடன் அணித்திரட்டி கொண்டிருக்க, ஆம் ஆத்மியோ எந்தவித சலனுமும் இல்லாமல் பாஜகவுக்கு மாற்று சக்தியாக உருவாகிவிட்டிருக்கிறது.

பஞ்சாப் தேர்தலில் வெற்றி பெற்றது ஒரு பெரும் சாதனை தான் என்றாலும் கூட, புதிய ஆம் ஆத்மி அரசுக்கு முன்பு ஏராளமான சவால்கள் குவிந்து கிடக்கின்றன. மிக முக்கியமாக, பஞ்சாபில் தலைவிரித்தாடும் வேலையில்லா திண்டாட்டத்தையும், எல்லை தாண்டி நடைபெறும் போதைப்பொருள் கடத்தலையும் ஆம் ஆத்மி எப்படி சமாளிக்கப் போகிறது என்பத தான் அனைத்து தரப்பினரும் எழுப்பும் கேள்வியாக உள்ளது. அதுமட்டுமின்றி, நீண்டகாலம் பஞ்சாபில் அரசியல் செய்து வந்த சிரோன்மணி அகாலி தளம் உள்ளிட்ட பிராந்தியக் கட்சிகளின் குடைச்சலை எப்படி ஆம் ஆத்மி எதிர்கொள்ள போகிறது என்பதும், தனக்கு மாற்று சக்தியாக உருவெடுத்துள்ள ஆம் ஆத்மிக்கு மத்திய பாஜக அரசு பஞ்சாபில் எவ்விதத்தில் ஒத்துழைப்பு அளிக்கும் என்ற கேள்விகளும் அடுக்கடுக்காக எழுகின்றன. பல சோதனைகளை கடந்து சாதனை படைத்த ஆம் ஆத்மி, பஞ்சாபில் உள்ள சவால்களையும் சமாளித்து தனது வெற்றிப் பயணத்தை தொடருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com