நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.
வட மாநிலங்களில் சிறியவர்கள் தொடங்கி பெரியவர்கள் வரை வண்ணங்களின் திருவிழாவைக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளைத் தூவி கொண்டாட்டத்தில் திளைத்துள்ளனர். டெல்லி, ஹரியானா, குஜராத், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் காலை முதலே கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது. வண்ணப் பொடிகளைத் தூவி விளையாடுவது ஒருபுறம் என்றால் பிரபலமான பாடல்களுக்குப் போட்டிப் போட்டுக் கொண்டு நடனமாடியும் மக்கள் தங்களின் கொண்டாட்ட மனநிலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
ராணுவ வீரர்கள் கொண்டாட்டம்
எல்லையில் ராணுவ வீரர்களும் ஹோலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் ஆர்எஸ் புரா பகுதியில் எல்லைப் பாதுகாப்பு படையினர் ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவி மகிழ்ச்சியாக ஹோலி கொண்டாடினர். வீரர்கள் நடனமாடி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். திரிபுராவிலும் எல்லை பாதுகாப்பு படையினர் ஹோலி கொண்டாடினர். வங்கதேச படையினரும் இந்திய வீரர்களோடு சேர்ந்து ஹோலி கொண்டாடி மகிழ்ந்தனர்.