கர்நாடகாவில் ஹிஜாபுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள், அங்கிருந்த தேசியக் கொடியை அகற்றி காவிக் கொடியை ஏற்றியதால் பெரும் வன்முறை வெடித்தது.
கர்நாடகாவில் பல பகுதிகளில் உள்ள கல்லூரிகளில் தற்போது ஹிஜாப் விவகாரம் பெரும் போராட்டத்துக்கும், வன்முறைக்கும் வித்திட்டுள்ளது. முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரக்கூடாது என வலியுறுத்தி ஒருதரப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், கர்நாடகாவின் ஷிவ்மொக்கா மாவட்டத்தில் உள்ள ஒரு அரசுக் கல்லூரியில் ஹிஜாப் பிரச்னையை முன்வைத்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் காவித் துண்டுகளை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ஒரு மாணவர் கல்லூரி வளாகத்தில் உள்ள கொடிக் கம்பத்தில் ஏறி அதன் உச்சியில், தான் வைத்திருந்த காவிக் கொடியை ஏற்றினார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பு மாணவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில், இரு தரப்பைச் சேர்ந்தவர்களும் ஒருவரையொருவர் உருட்டுக் கட்டைகளாலும், கற்களை வீசியும் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.
<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">Hindu Right-Wing has never accepted India’s tricolor. Only in 2002, after 52yrs, RSS office had hoisted the tricolor for the first time. Hindu Right Wing replaced today the tricolor with their saffron flag in a college in Karnataka. <a href="https://t.co/yRckX6V4De">pic.twitter.com/yRckX6V4De</a></p>— Ashok Swain (@ashoswai) <a href="https://twitter.com/ashoswai/status/1491004781489700866?ref_src=twsrc%5Etfw">February 8, 2022</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>
இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், உடனடியாக அங்கு வந்து தடியடி நடத்தி மாணவர்களை கலைந்து போக செய்தனர். இதனைத் தொடர்ந்து, அசம்பாவிதங்களை தவிர்ப்பதற்காக ஷிவ்மொக்கா மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதேபோல, கர்நாடகாவின் தாவண்கரே மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரியிலும் ஹிஜாபுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரவு தெரிவித்தும் இருதரப்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவர்களை கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். மாணவர்களும் போலீஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அதன் பின்னர், போலீஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மாணவர்களை கலைத்தனர்.