இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் தங்கத்தைப்போல வைரத்திற்கும் மதிப்பு மிக அதிகம். இந்த வைரம் முதன் முதலில் இந்தியாவில் தான் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த வரலாறை பார்க்கலாம்.
ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னும் இடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்ற இடத்தில் தான் வைரங்கள் கிடைத்ததாக சொல்லப்படுகிறது. சுமார் 2800 ஆண்டுகளுக்கு முன்னதாக இங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்ட வைரமானது கலிங்க நாட்டின் வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா ரோம் போன்ற அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதாம். முதலில் வைரத்தை அப்படியே எடுத்து விற்று வந்தவர்கள் பிறகு அதை பட்டை தீட்டும் முறையை கற்றுக்கொண்டு அதை நடைமுறைப்படுத்தினார்கள்.
பிறகு பல நூற்றாண்டை கடந்து பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டி இருக்கிறார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்ஜியம் கட்டிங்.
பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 200 கிலோமீட்டர் ஆழத்தில் 1,200 முதல் 1,800 டிகிரி செண்டிகிரேடு வெப்பத்தில் கார்பனானது வைரமாக மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. அப்படி என்றால் சுத்தமான கார்பனை 1,800 டிகிரி வெப்பத்தைக்கொண்டு இன்ஸ்டன்ட் வைரம் தயாரிக்க முடியுமா என்றால் அது தான் முடியாது. ஏனெனில் ஒரு வைரம் உருவாவதற்கு 30 மில்லியன் (3.5 )பில்லியன் ஆண்டுகள் ஆகும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அப்படி என்றால் இன்று நாம் வாங்கும் வைரமானது 30 மில்லியன் ஆண்டிற்கு முற்பட்டதென்றால் பழமை எங்கேயும் போய்விடவில்லை, வைரமாய் நம்மிடத்திலேயே தான் இருக்கிறது.
இந்தியாவிற்கு அடுத்தப்படியாக தென் ஆப்பிரிக்காவில் தான் வைரங்கள் அதிகளவு கிடைக்கிறது. அங்கிருக்கும் ஜாகர் பவுண்டன் வைரச்சுரங்கத்திலிருந்து வெட்டி எடுக்கப்படும் ஒரு வகை வைரம் தான் ப்ளூஜாகர். இது நீல ஒளியை பாய்ச்சக்கூடிய உயர் வகை வைரம். இந்த வகை வைரம் கிடைப்பது மிகவும் அரிது. ஏனெனில் ஜாகர் பவுண்டன் சுரங்கமானது தற்பொழுது உபயோகத்தில் இல்லை.
எனினும், இந்தியாவின் மத்தியபிரதேசத்தில் பன்னா என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தரமான வைரங்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. என்றாலும் ஆப்பிரிக்காவை ஒப்பிடும் பொழுது மிகவும் குறைந்த அளவே கிடைக்கிறது. ஒரு காரட் வைரம் வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 டன் மண் (35/40 லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டுமாம். அதிலேயும் ஏமாற்றமடையலாம் என்கிறார்கள்.
ப்ளூஜாக் வைரத்தை தவிர, வெள்ளை, மஞ்சள், பிரவுன், கிரே, பச்சை, ஆரஞ்சு, பிங்க் ஆகிய நிறங்களிலும் வைரம் கிடைக்கிறது.
இந்தியாவின் கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரத்தின் எடை 105.80 காரட். இது லண்டலில் உள்ள மகாராணி மகுடத்தை அலங்கரித்துக்கொண்டிருக்கிறது.
அதே போல் தென் ஆப்ரிக்காவில் கண்டெடுத்த கோல்டன் ஜூப்ளி என்ற வைரம் தாய்லாந்து அரசிடம் உள்ளது. இதன் எடை 545.67 காரட்.
இது கோல்கொண்டாவில் உள்ள கொல்லூர் சுரங்கத்தில் வெட்டி எடுக்கப்பட்ட வைரம். இந்த கோகினூர் வைரத்தை வாரங்கல்லில் உள்ள பத்திரகாளியம்மனின் இடது கண்ணாக அலங்கரித்து வந்தனராம் அந்த மக்கள். பிறகு வந்த அலாவுதீன் கில்ஜியின் காலத்தில் இந்த வைரம் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இவரிடமிருந்த இந்த வைரத்தை நாதிர் ஷா என்பவர் கொள்ளையடித்ததாகவும், பின்னர் பல கைகள் மாறி இறுதியில் ஆங்கிலேயரின் ஆட்சி காலத்தில் விக்டோரியா மகாராணியிடம் சென்றது. பின்னர் எலிசெபெத் தனது மணிமகுடத்தில் சூட்டிக்கொண்டார்.
வைரத்தை அதன் உயிரோட்டத்தைப் பொருத்து நல்லது, கெட்டது என்று பிரிப்பர். நல்ல வைரம் ஒருவரை உச்சநிலைக்குக்கொண்டு செல்லும் எனவும், கெட்ட வைரம் ஒருவரை அதளபாதாளத்திற்கு தள்ளிவிடும் என்பது பலரது நம்பிக்கை.