இஸ்லாமிய திருமண ஊர்வலத்தில் அரணாக நின்ற இந்துக்கள்..!

இஸ்லாமிய திருமண ஊர்வலத்தில் அரணாக நின்ற இந்துக்கள்..!
இஸ்லாமிய திருமண ஊர்வலத்தில் அரணாக நின்ற இந்துக்கள்..!
Published on

கான்பூரில் நடைபெற்ற இஸ்லாமிய திருமணத்தில் மணமகனின் ஊர்வலத்திற்கு இந்து நண்பர்கள் மனிதச் சங்கிலி அமைத்து பாதுகாப்பு கொடுத்தனர்.

குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் போராட்டத்தின் போது, வன்முறைகள் ஏற்பட்டு 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கிடையே கடந்த 21-ஆம் தேதி உத்தரப் பிரதேசத்தின் கான்பூரில் நடைபெற்ற இஸ்லாமிய திருமணத்தில் உணர்ச்சிமிகு நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

கான்பூரின் பாகர்கஞ் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஷினத் (25). இவர் தனது 12 வயதிலேயே தந்தையை இழந்தவர். நீண்ட வருடங்களுக்குப் பின்னர் இவர்களது வீட்டில் சுப நிகழ்ச்சியாக, ஷினத்திற்கு திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர். திருமணம் நடைபெற்ற தினத்தன்று பாகர்கஞ் பகுதியில் நடைபெற்ற குடியுரிமை சட்டத்திருத்த போராட்டத்தின்போது வன்முறை ஏற்பட்டிருக்கிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவிக்கொண்டிருந்தது.

ஷினத் குடும்ப பாரம்பரியத்தின்படி, மணமகனை ஊர்வலமாக திருமண மண்டபத்திற்கு கொண்டு வருவது வழக்கம். ஆனால் வன்முறைகள் நடைபெறும் நேரத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு மணமகனை அழைத்து வருவது ஆபத்தான முயற்சி என பலரும் கூற, என்ன செய்வதென்று தெரியாமல் திருமண வீட்டினர் சங்கடத்தில் ஆழ்ந்தனர். ஏனென்றால் மணமகன் ஊர்வலம் நடைபெறுவதாக இருந்த நேரத்திற்கு, இரண்டு மணி நேரம் முன்னதாக வன்முறையில் ஒருவர் அப்பகுதியில் உயிரிழந்திருந்தார். அதுமட்டுமின்றி ஏராளமான பாதுகாப்பு படையினர் ரோந்து சென்றுகொண்டிருந்தனர்.

இந்த சூழ்நிலையை கண்ட ஷினத் குடும்பத்தினரின் பக்கத்துவீட்டு நபரான விமல் சபாடியா, அவர்களுக்கு உதவிபுரிய நினைத்தார். சிறுவயதிலேயே தந்தையை இழந்த ஷினத்தை தனது இளைய சகோதரியாக கருதி அன்பு காட்டி வந்த விமல், தனது தங்கை திருமணம் நல்லபடியாக நடக்க வேண்டும் என முடிவு செய்தார். உடனே தனது நண்பர்களான சோம்நாத் திவாரி மற்றும் நீராஜ் திவாரி ஆகியோரிடம் உதவி கேட்டார். அவர்களும் உடனே உதவ முன்வந்ததுடன், தங்களது நண்பர்களையும் அழைத்தனர். இவ்வாறாக சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர்.

மணமகன் ஊர்வலம் தொடங்க இருந்த இடத்திற்கு சென்ற அவர்கள், மணமகன் வரும் வழிநெடுக மனிதச் சங்கிலி போன்று கைகளை கோர்த்துக்கொண்டு பாதுகாப்பு கொடுத்து, திருமணம் நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இஸ்லாமியரின் திருமணத்திற்கு 50க்கும் மேற்பட்ட இந்துக்கள் அரணாக பாதுகாப்பு கொடுத்து கூட்டிச்சென்ற சம்பவம் காண்போரை ஒற்றுமை எண்ணத்துடன் நெகிழ்ச்சியடையச் செய்தது. மதம், இனம் அனைத்தையும் கடந்த நண்பர்கள் என்ற முறையில் அனைவரும் இணைந்து நின்றதால், அந்த இளம் ஜோடிகளின் திருமணம் மகிழ்ச்சியுடன் நடந்து முடிந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com