கேரளாவில் லவ் ஜிஹாத் மூலம் இந்து பெண்கள் ஏமாற்றப்படுவதாக, பாஜகவில் இணையவுள்ள 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன் கூறியுள்ளார்.
இந்தியாவின் 'மெட்ரோ மேன்' என்று பிரபலமாக அறியப்பட்ட இ.ஸ்ரீதரன், பாஜகவில் தன்னை இணைத்துக்கொள்ள இருக்கிறார். எதிர்வரும் கேரள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராகவும் களமிறங்கத் தயாராக இருப்பதாக கூறியிருக்கிறார்.
இந்த நிலையில், என்.டி.டி.வி-க்கு அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'லவ் ஜிஹாத்' தொடர்பாக பேசியிருக்கிறார். "லவ் ஜிஹாத், ஆம், கேரளாவில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கிறேன். கேரளாவில் உள்ள இந்து பெண்கள், திருமணத்தின் மூலம் ஏமாற்றப்படுவதை நேரில் பார்த்து வருகிறேன். ஒரு திருமணத்தில் இந்துக்கள் எவ்வாறு ஏமாற்றப்படுகிறார்கள், அவர்கள் எப்படி கஷ்டப்படுகிறார்கள் என்பதை பார்க்கிறேன். அதனால்தான் 'லவ் ஜிஹாத்' என்ற கருத்தை எதிர்க்கிறேன்.
இந்துக்கள் மட்டுமல்ல, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவ சிறுமிகளும் ஏமாற்றப்படுகிறார்கள். அந்த மாதிரியான ஒரு விஷயத்தை நான் நிச்சயமாக எதிர்ப்பேன்" என்றவர், மாட்டிறைச்சி குறித்தும் பேசியிருக்கிறார்.
"தனிப்பட்ட முறையில், நான் மிகவும் கண்டிப்பான சைவ உணவு உண்பவன். நான் முட்டைகளை கூட சாப்பிடுவதில்லை, நிச்சயமாக யாரும் இறைச்சி சாப்பிடுவதை நான் விரும்பவில்லை. அது நிச்சயம்" என்று அதில் கூறியிருக்கிறார்.
இதற்கிடைய, இன்னொரு பேட்டியில், அரசியல் என்ட்ரி குறித்தும் ஸ்ரீதரன் பேசியிருக்கிறார். "ஆளுநராக வேண்டும் என்று கட்சியில் சேரவில்லை. அந்த பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டாலும் ஆளுநராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் முதல்வர் பதவி குறித்து கட்சி முடிவு செய்ய வேண்டும். நான் முதல்வர் முகமாக திட்டமிடப்பட்டால், கேரளாவின் இரு முனைகளிலும் மகிழ்ச்சியற்ற ஒரு பெரிய குழு நிச்சயமாக எங்களுடன் வரும் என்று நான் நினைக்கிறேன். ஒரு பெரிய புரட்சி இருக்கும் என்றும் நான் நினைக்கிறேன். அதனுடன், பாஜகவுக்கு போதுமான எண்ணிக்கையிலான இடங்கள் கிடைக்கும்.
நான் ஆரம்பத்தில் இருந்தே ஒரு பாஜக அனுதாபியாக இருந்தேன், குறிப்பாக நான் ஒரு மாணவனாக இருந்தபோது, ஆர்எஸ்எஸ் கூட்டங்களில் தீவிரமாக கலந்து கொண்டேன். இயற்கையாகவே நான் பாஜக கொள்கை எண்ணத்தில் வளர்ந்தவன். பாஜகவினர் நேர்மையானவர்களாகவும், இரக்கத்துடன் நாட்டிற்காகவும் உழைக்கும் மக்கள். அதனால்தான் இயற்கையாகவே எனது விருப்பம் பாஜகவாக இருந்தது.
எந்தவொரு பெரிய திட்டத்தையும் மாநிலத்திற்கு கொண்டு வர தற்போதைய கேரள அரசாங்கம் தவறிவிட்டது. படித்த இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வழிவகுக்கும் தொழில்கள் மாநிலத்தில் இல்லை. தேசிய நெடுஞ்சாலை மற்றும் நிலாம்பூர் நஞ்சங்குட் ரயில் திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படவில்லை. அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுவதாகக் கூறப்படும் திட்டங்கள் அனைத்தும் முந்தைய யுடிஎஃப் அரசாங்கங்களிலிருந்து வந்தவை" என்றும் கூறியிருக்கிறார்.
யார் இந்த 'மெட்ரோ மேன்' ஸ்ரீதரன்?