இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில் ராமாயண கதையை மையமாக வைத்து வெளியாகி உள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். 'ஆதிபுருஷ்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் நேற்று (ஜுன் 16) திரையரங்குகளில் வெளியானது.
பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகியிருக்கும் 'ஆதிபுருஷ்' குறித்து சமூக ஊடகங்களில் கலவையான விமர்சனங்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. இப்படம் பிரபாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள போதிலும், ஒரு படமாக பார்க்கும் போது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்பது போன்ற நெகடிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. ஏறக்குறைய ரூ.500 கோடி பட்ஜெட்டில் மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் அனிமேஷன் காட்சிகளை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். VFX காட்சிகள் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம், என்பதே பெரும்பாலான ரசிகர்களின் பொதுவான கருத்தாக உள்ளது.
இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தை எதிர்த்து இந்துசேனா அமைப்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத் தாக்கல் செய்திருக்கிறது. ராமாயண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள 'ஆதிபுருஷ்' திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும் அதனை நீக்க வேண்டும் என்றும் இந்து சேனா அமைப்பின் தேசிய தலைவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். ராமர், ராமாயணம் மற்றும் இந்து கலாச்சாரத்தை கேலிக்குள்ளாக்கும் வகையில் 'ஆதிபுருஷ்' படம் அமைந்திருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, 'ஆதிபுருஷ்' படத்தில் சீதை இந்தியாவின் மகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதற்கு நேபாளத்தில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. ராமாயணத்தின் படி, சீதை நேபாளத்தில் பிறந்தார். ராமர் வந்து அவரை மணந்தார். இதையடுத்து சீதா இந்தியாவின் மகள் என்ற சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்காவிடில், நேபாளத்தில் ஆதிபுருஷ் படத்தை வெளியிட விட மாட்டோம் என நேபாளத்தின் காத்மண்டு் மேயர் பலேன் ஷா போட்ட ட்வீட் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து சர்ச்சையை கிளப்பிய அந்த வசனத்தை ஆதிபுருஷ் படக்குழு நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.