வாரணாசி| கோயில்களில் இருந்து சாய் பாபா சிலைகளை அகற்றிய இந்துத்துவா அமைப்பினர்.. கிளம்பிய எதிர்ப்பு!

வாராணசியில் உள்ள பல கோயில்களில் இருந்து சாய்பாபாவின் சிலைகள் அகற்றப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாய் பாபா
சாய் பாபாஎக்ஸ் தளம்
Published on

வாரணாசியில் சாய்பாபா சிலைகள் அகற்றம்

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பிரசித்தி பெற்ற படா கணேஷ் கோயில் உட்பட 10க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு அகற்றியுள்ளனர். சனாதன் ரக்‌ஷக் தளம் (எஸ்ஆர்டி) மற்றும் 'பிராமண சபா' ஆகியவை வாரணாசியில் உள்ள கோயில்களில் உள்ள சாய்பாபா சிலைகளை அகற்றுவதற்கான பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன. ஆதாரங்களின்படி, சாய்பாபா ஒரு முஸ்லீம் என்றும், சனாதன தர்மத்துடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்றும் கூறும் இந்துத்துவா அமைப்புகளால், அடுத்த சில நாட்களில் பூதேஷ்வர் மற்றும் அகஸ்தேஸ்வரர் கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகள் அகற்றப்படும் எனவும் அவைகள் தெரிவித்துள்ளன.

படா கணேஷ் கோயில் தலைமை அர்ச்சகர் ராம்மு குரு, “சாய் பாபாவை சரியான அறிவு இல்லாமல் வழிபடுகிறார்கள். இது சாஸ்திரப்படி தடைசெய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதேபோல் அன்னபூர்ணா கோயிலின் தலைமை அர்ச்சகர் சங்கர் பூரி, “சாயிபாபாவை வழிபடுவது குறித்து சாஸ்திரங்களில் குறிப்பிடப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

சாய்பாபா சிலைகள் அகற்றப்படுவது ஏன்?

இதுகுறித்து எஸ்ஆர்டி தலைவர் தலைவர் அஜய் சர்மா, ”நாங்கள் சாய்பாபாவுக்கு எதிரானவர்கள் அல்ல, ஆனால் அவரது சிலைகளுக்கு கோயில்களில் இடமில்லை. சாய்பாபாவின் சீடர்கள் அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலில் மட்டுமே அவரை வழிபடலாம். சனாதன தர்மம் பற்றி தெரியாத சிலர், மற்ற கோயில்களில் சாய்பாபாவின் சிலைகளை நிறுவியுள்ளனர். இறந்தவரின் சிலையை, கோயில்களில் நிறுவ முடியாது. அதற்கு சனாதன தர்மத்தில் அனுமதி இல்லை. சூரியன், விஷ்ணு, சிவன், சக்தி மற்றும் விநாயகர் ஆகிய ஐந்து கடவுள் மற்றும் தெய்வங்களின் சிலைகளை மட்டுமே கோயில்களில் நிறுவி வழிபடலாம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இறந்தவர்களின் சாம்பல்.. எஞ்சும் உலோகங்கள்.. ரூ.377 கோடி வருமானம் ஈட்டும் ஜப்பான்!

சாய் பாபா
'சாய் பாபா.. நீ அனைத்தையும் பார்க்கிறாய்' - அணியில் இடம் கிடைக்காத பிரித்வி ஷா புலம்பல்

அதுபோல், சங்கராச்சாரியார் சுவாமி ஸ்வரூபானந்த சரஸ்வதியும் சாய் பாபாவை வணங்குவதை எதிர்த்துள்ளார். அவர், “சாய் பாபா ஓர் இந்துக் கடவுள் இல்லை. பழங்கால சாஸ்திரங்களில் சாய் பாபாவைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொரு பாகேஷ்வர் தாமின் ஆச்சார்யா தீரேந்திர சாஸ்திரியும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர், ”சாய் பாபாவை 'மகாத்மா'வாக வணங்கலாம். ஆனால் கடவுளாக வணங்க முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.

சாய் பாபா சிலைகள் அகற்றப்படுவதற்கு கடும் எதிர்ப்பு

சாய் பாபா சிலைகள் அகற்றப்படுவதற்கு இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வாரணாசி சிக்ரா பகுதியில் உள்ள சாந்த் ரகுவர் தாஸ் நகரில் அமைந்துள்ள சாய் பாபா கோயிலின் அர்ச்சகர் சமர் கோஷ், “இன்று சனாதனிகள் என்று கூறிக்கொள்பவர்கள், கோயில்களில் சாய்பாபாவை நிறுவியர்கள்தான். இப்போது அவர்களே, கடவுளை எந்தரூபத்திலும் பார்க்க முடியாது. அது மக்களின் நம்பிக்கையை புண்படுத்தும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ஈரான் வீசிய ஏவுகணைகள்... தப்பிக்க ஓடினாரா இஸ்ரேல் பிரதமர்? வைரல் வீடியோ.. உண்மை என்ன?

சாய் பாபா
சீரடி சாய் பாபா கோயிலில் நயன்தாரா-விக்னேஷ் சிவன் வழிபாடு

சாய்பாபா பக்தரான விவேக் ஸ்ரீவஸ்தவா, ”சாய்பாபாவின் சிலை அகற்றப்பட்டது மிகவும் வேதனையளிக்கிறது. இந்த சம்பவம் கோடிக்கணக்கான சாய் பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தியுள்ளது. எல்லா கடவுள்களும் ஒன்றுதான். அனைவருக்கும் எந்த வடிவில் கடவுளை வணங்கும் உரிமை உள்ளது. சாய்பாபா இந்துவாக இருந்தாலும் அல்லது முஸ்லீமாக இருந்தாலும் அந்த பிரிவினைகளை உருவாக்கியது நாம்தான். கடவுள் மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்துவதில்லை" என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து சமாஜ்வாதி கட்சி (எஸ்பி) தலைவரும், உத்தரப்பிரதேச சட்ட மேலவை உறுப்பினருமான அசுதோஷ் சின்ஹா, ”கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றுவது பாஜகவின் அரசியல் சண்டை. சாய்பாபா மகாராஷ்டிராவில் பரவலாக மதிக்கப்படுகிறார். இந்து மதம் அனைவரையும் உள்ளடக்கிய மதம். பல நூற்றாண்டுகளாக அது பல்வேறு சிந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, சாய் பாபா சிலைகள் அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதனைப் பாதுகாக்கும் முயற்சியில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்கள், கோயில்களில் உள்ள சாய்பாபாவின் சிலைகளை சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கும் நோக்கத்துடன் ’ஸ்ரீசாய் சேவக் தல் பனாரஸ்’ என்ற புதிய குழுவை உருவாக்கியுள்ளனர். தவிர, இதுதொடர்பாக அவர்கள் வாரணாசி போலீஸ் கமிஷனரிடம் முறைப்படி புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து ஸ்ரீசாய் சேவக் தல் பனாரஸ் தலைவர் அபிஷேக் குமார் ஸ்ரீவஸ்தவா, “சாய் பாபா சிலைகளை அகற்றுவது வாரணாசி மற்றும் தேசத்தின் அமைதியான சூழலை சீர்குலைக்கும். எதிர்காலத்தில் கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகள் அகற்றப்படாமல் இருக்க சட்ட அமலாக்கத்தை இந்தக் குழு கோரும்” எனத் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில் வாரணாசியில் உள்ள கோயில்களில் இருந்து சாய்பாபா சிலைகளை அகற்றியது தொடர்பாக, சனாதன் ரக்ஷக் தளத்தின் தலைவர் அஜய் சர்மா போலீசாரால் கைது செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க: சமந்தா மணமுறிவு விவகாரம்| ”அந்தக் கருத்தில் இருந்து பின்வாங்கிவிட்டேன்; ஆனால்..“- தெலங்கானா அமைச்சர்

சாய் பாபா
ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்டதாக சொல்லப்படும் சிவலிங்கம் - வாரணாசி நீதிமன்றம் அதிரடி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com