"கிருஷ்ண ஜென்ம பூமியில் அமைந்திருக்கும் சாஹி இத்கா மசூதியில் அபிஷேகம் செய்ய அனுமதிக்க வேண்டும்" எனக் கோரி மதுரா நீதிமன்றத்தில் இந்து மகா சபா மனு தாக்கல் செய்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள 13.37 ஏக்கர் பரப்பிலான நிலம் கிருஷ்ண ஜென்ம பூமி என அழைக்கப்படுகிறது. இந்த இடத்தில் 2.37 ஏக்கர் பகுதியில் சாஹி இத்கா மசூதி கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, இந்த 2.37 ஏக்கர் நிலத்தை இந்துக்களிடம் ஒப்படைக்கக் கோரி மதுரா சிவில் நீதிமன்றத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீ கிருஷ்ண விரஜ்மான் என்பவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு வரும் 26-ம் தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு வரவுள்ளது.
புதிய மனு
இந்நிலையில், கிருஷ்ண ஜென்ம பூமி தொடர்பாக இந்து மகா சபாவின் பொருளாளர் தினேஷ் சர்மா மதுரா நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், "மதுராவில் சாஹி இத்கா மசூதி அமைந்திருக்கும் பகுதியானது இந்துக்களின் கடவுளான பகவான் கிருஷ்ணர் பிறந்த இடமாகும். எனவே அந்த மசூதியில் தூய்மை செய்யும் அபிஷேகத்தை செய்ய நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு, ஜூலை 1-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தினேஷ் சர்மா கூறுகையில், "ஒருகாலத்தில் இந்துக் கோயில்கள் வாள் முனையில் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு அபகரிக்கப்பட்டன. இவ்வாறு அபகரிக்கப்பட்ட எங்களின் பாரம்பரியக் கோயில்களை தற்போது நாங்கள் மீட்டெடுக்க தொடங்கியுள்ளோம். கிருஷ்ண ஜென்ம பூமியில் இருக்கும் மசூதியை அப்புறப்படுத்தி, இந்துக்களின் சுய மரியாதையை மீண்டும் நிலைநிறுத்துவதே எங்கள் குறிக்கோள்" என்றார்.