உத்திரப்பிரதேசம் அலிகாரில் இந்து மகாசபா தேசிய செயலாளர் சக்குன் பாண்டே, காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுடுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசத்தின் தந்தையாக கொண்டாடப்படும் காந்தி கடந்த 1948 ஆம் ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி தனது 78 வது வயதில் நாதுராம் கோட்சேவினால் டெல்லியில்
சுட்டுக் கொல்லப்பட்டார். இதையொட்டி இன்றைய தினம் காந்தியடிகளின் நினைவு தினம் என்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இன்று காந்தியின் 71 வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத்தலைவர்
ராம்நாத் கோவிந்த் ஆகியோர் காந்தியின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், உத்திரப்பிரதேசம் அலிகாரில் இந்து மகாசபா தேசிய செயலாளர் சக்குன் பாண்டே, காந்தியின் உருவ பொம்மையை துப்பாக்கியால் சுடுவது
போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில், சக்குன் பாண்டே ஒரு துப்பாக்கியால் காந்தியின் உருவ பொம்மையை சுடுகிறார். அதிலிருந்து ரத்தம் போன்று சிவப்பு நிற திரவம் உருவ
பொம்மையில் உள்ள காந்தியின் புகைப்படம் மேலே தெளிக்கிறது. பின்னர், காந்தியின் கொடும்பாவியை தீயிட்டு எரித்து ஆதரவாளர்களுடன் பாண்டே
கோஷமிடுகிறார். இதையடுத்து பாண்டே காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவின் சிலைக்கு மாலை அணிவிக்கிறார். பின்னர் தனது ஆதரவாளர்களுக்கு
இனிப்புகள் வழங்கி பாண்டே மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற மகாசபாவினரின் கொண்டாட்டம் இது முதல் முறையல்ல.
ஒவ்வொரு வருடமும் காந்தியின் நினைவு நாள் அன்று இந்து மகாசபாவினர் இந்தக் கொண்டாட்டத்தில் இனிப்புகள் வழங்கி வருகின்றனர்.