காந்தி உருவ பொம்மை சுடப்பட்ட விவகாரத்தில் இந்து மகாசபை தலைவர் பூஜா பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார்.
மகாத்மா காந்தியின் நினைவு நாளான கடந்த 30 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், இந்து மகாசபையைச் சேர்ந்த சிலர் காந்தியின் உருவ பொம்மையைத் துப்பாக்கியால் சுட்டும், தீ வைத்தும் எரித்தனர். கோட்சேவுக்கு ஆதரவாக கோஷங்களும் எழுப்பினர். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பானது. இதையடுத்து இதில் தொடர்புடைய சிலர் கைது செய்யப்பட்டனர். 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், காந்தி உருவ பொம்மையைத் துப்பாக்கியால் சுட்டதாக இந்து மகாசபை தேசியச் செயலாளர் பூஜா பாண்டே கைது செய்யப்பட்டுள்ளார். பூஜா பாண்டே காந்தி உருவ பொம்மையைச் சுட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் தான் அதிக அளவில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் பூஜா பாண்டே மாற்றும் அவரது கணவர் அசோக் பாண்டே இருவரும் அலிகார் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து அசோக் பாண்டே ஏற்கனவே பேசுகையில், “நாங்கள் செய்ததில் எதுவும் தவறில்லை. ராவண உருவ பொம்மை எரிப்பை போன்றதுதான் இது. எங்கள் அலுவலகத்திற்கு உள்ளேதான் இதனை செய்தோம். காந்தியும்தான் இந்திய பிரிவினைக்கு காரணம். சுமார் 10 லட்சம் இந்துக்கள் அப்போதைய கலவரத்தில் கொல்லப்பட்டார்கள்” என்று கூறியிருந்தார்.
அதேபோல், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் போது செய்தியாளர்களிடம் பேசிய பூஜா பாண்டே, “வருத்தம் தெரிவிக்க போவதில்லை. நாங்கள் எந்தக் குற்றமும் செய்யவில்லை. நாங்கள் எங்களுடைய அரசியலமைப்பு உரிமையை பயன்படுத்தி உள்ளோம்” என்றார்.