பத்மாவதி திரைப்படத்துக்கு எதிராக குஜராத் மற்றும் ராஜஸ்தானில் மிகப் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
குஜராத் மாநிலம் சூரத் மற்றும் காந்தி நகரில், விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள், ராஜ்புத் கர்னி சேனா உள்ளிட்ட இந்து அமைப்புகள் கண்டனப் பேரணியை நடத்தின. ராஜஸ்தான் மாநிலத்தில், ராஜ்புத் சமூகத்தினர் பல்வேறு இடங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பத்மாவதி திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். உத்தரப் பிரதேச மாநிலத்திலும் ஹிந்து அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
நடிகை தீபிகா படுகோனே கதாநாயகியாக நடித்துள்ள வரலாற்று பின்னணியை அடிப்படையாக கொண்ட பத்மாவதி படத்தில், ராஜ்புத் சமூகத்தினரை தவறாக சித்தரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் படத்தை வெளியிடுவதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கிடையே, இந்த படத்துக்கு எதிராக ஜெய்ப்பூரில் சுற்றுலா வழிகாட்டிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இஸ்லாமிய மன்னர் அலாவுதீன் கில்ஜி, சித்தூர் மகாராணி பத்மாவதி ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு பத்மாவதி படம் தயாராகி உள்ளது.