அதானி விவகாரம்| செபி அனுப்பிய நோட்டீஸ்.. புதிய நிறுவனத்தை இழுத்துவிட்ட ஹிண்டன்பர்க்!

ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்திற்கு செபி விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியது. அதேநேரத்தில், செபியின் நோட்டீஸ் பெற்ற பின்னர் ஹிண்டன்பர்க் ரிசர்ச் மீண்டும் ஒரு பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளது.
அதானி
அதானிஎக்ஸ் தளம்
Published on

அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் கடந்த ஆண்டு தொடக்கத்தில் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையால் பங்கு மதிப்பில் வீழ்ச்சியைக் காட்டியதோடு, இதனால் பெரும் இழப்பை எதிர்கொண்ட அதானி குழுமம், பணக்காரப் பட்டியலிலும் இறக்கத்தைச் சந்தித்தது. மேலும், இவ்விவகாரம் நாடாளுமன்றம் வரை எதிரொலித்தது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் உண்மைத் தன்மையை ஆராய வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், அதானி குழுமத்தின் மீதான வழக்கை செபி எனப்படும் பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமே விசாரிக்கட்டும் என உச்சநீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியது.

இதையடுத்து, கடந்த 1.5 வருடமாக இதுகுறித்து செபி விசாரணை செய்துவந்த நிலையில், தற்போது ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனத்திற்கு செபி விளக்கம் கேட்டு ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியது. அதேநேரத்தில், செபியின் நோட்டீஸ் பெற்ற பின்னர் ஹிண்டன்பர்க் ரிசர்ச் மீண்டும் ஒரு பகீர் குற்றச்சாட்டைக் கிளப்பியுள்ளது.

இதையும் படிக்க: ராகுல் டிராவிட்டிற்கு மீண்டும் பதவி வழங்கப்படாதது ஏன்?.. பின்னணியில் இருக்கும் அரசியல் என்ன?

அதானி
முக்கியத் தகவல்கள் மறைப்பு| அதானி குழுமத்தில் விதிமுறைகளை மீறி முதலீடு.. கண்டுபிடித்த செபி!

இதுகுறித்து ஹிண்டன்பர்க், “இந்தியாவில் மிகவும் சக்திவாய்ந்த நபர்கள் செய்த ஊழல் மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்துபவர்களை அமைதியாக்கும் மற்றும் மிரட்டும் முயற்சியாகவே செபி ஷோகாஸ் நோட்டீஸை எங்களுக்கு அனுப்பியுள்ளது. மோசடியாளர்கள் மீது தான் செபி போன்ற அமைப்புகள் நடவடிக்கை எடுக்கும் என பலரும் நினைக்கலாம். ஆனால் இங்கு மாறாக, செபி இத்தகைய மோசடி நடைமுறைகளை வெளியுலகத்திற்குக் கொண்டு வருபவர்கள் மீது செபி அதிக ஆர்வம் காட்டுவதாகத் தெரிகிறது” எனக் குற்றஞ்சாட்டியிருப்பதுடன், இந்த விவகாரத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கியையும் சேர்த்துள்ளது. அதாவது, ’அதானி பங்குகளை ஷார்ட் செய்வதற்காக ஹிண்டன்பர்க் நிறுவனம் ஒரு முதலீட்டு பார்ட்னரைப் (investor partner) பயன்படுத்தியிருக்கிறது. இந்த பார்ட்னர் நிறுவனம் அதானி பங்குகளை ஷார்ட் செய்வதற்காக ஒரு ஃபண்டைப் பயன்படுத்தியிருக்கிறது.

இந்த ஃபண்டை உருவாக்கி, நிர்வகித்தது கோட்டக் மஹிந்திரா பேங்க்’ என புதிய குற்றச்சாட்டை வைத்துள்ளது.

அதானி பங்குகளை ஷார்ட் செய்ததன் வாயிலாக ஹிண்டன்பர்க் நிறுவனம் 4.1 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியுள்ளது. இதுபோக, அதானி குழுமத்தின் டாலர் பத்திரங்களை ஷார்ட் செய்ததன் வாயிலாக 31,000 டாலர் மட்டுமே கிடைத்ததாகவும் ஹிண்டன்பர்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், செபியின் நோட்டீஸில் கோட்டக் நிறுவனம் பற்றி எதுவும் குறிப்பிடாமல் 'KMIL' என்ற சுருக்கம் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், கோட்டக் வங்கியையும், அதன் நிறுவனர் உதய் கோட்டக்கையும் விசாரணையில் இருந்து மறைப்பதற்கு செபி முயற்சி செய்கிறதோ என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் ஹிண்டன்பர்க் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: ”என் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்” - சபாநாயகரிடம் வேண்டுகோள் வைத்த பாகிஸ்தான் பெண் எம்.பி! #Video

அதானி
அதானி - ஹிண்டென்பெர்க் விவகாரம்: செபி அமைப்பின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com