இந்திய பிரதமர் நரேந்திர மோடி 3 நாள் அரசுமுறை பயணமாக கடந்த செவ்வாய்க்கிழமை அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அமெரிக்கா நாடாளுமன்றத்திலும் சிறப்புரையாற்றினார்.
அமெரிக்காவில் தனது பயணத்தை முடித்துக்கொண்ட பிரதமர், 2 நாள் பயணமாக எகிப்து புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர் எகிப்து நாட்டின் பிரதமர் அப்தெல் பதாவை சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள உள்ளார்.
முன்னதாக அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனியார் நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் அவர், ''இந்தியப் பிரதமர் மோடியுடன் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால், அவரிடம் ஒருவேளை நீங்கள் இந்தியாவில் உள்ள சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கவிட்டால் ஒருக்கட்டத்தில் இந்தியாவில் பிளவு ஏற்படுவதற்காக வாய்ப்பு வலுவாக உள்ளது என்று கூறியிருப்பேன். இல்லாவிட்டால், அதிபர் பைடனாவது பிரதமர் மோடியை சந்திக்கும்போது இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள இந்தியாவில் முஸ்லிம் சிறுபான்மையினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவது குறித்து பேச வேண்டும்'' எனக் கூறியிருந்தார்.
ஒபாமாவின் இந்தக் கருத்துக்கு பா.ஜ.க.வினர் பலரும் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பத்திரிகையாளர் ஒருவர் ட்விட்டரில், 'ஒபாமாவை கைது செய்ய அசாம் போலீசார் வாஷிங்டனுக்கு செல்வார்களா?' என்று கிண்டலாக கேள்வி எழுப்பி இருந்தார். அதாவது, நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜகவை விமர்சிப்பவர்களுக்கு எதிராக அசாமில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டதையும், கைது செய்த சம்பவத்தையும் விமர்சிக்கும் வகையில் இந்த ட்வீட்டை அவர் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், அந்த ட்வீட்டை குறிப்பிட்டு பதிலளித்துள்ள பாஜகவை சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, "இந்தியாவிலேயே 'ஹுசைன் ஒபாமாக்கள்' நிறைய பேர் உள்ளனர். வாஷிங்டனுக்கு செல்வதற்கு முன்பு நாம் இவர்களை கவனித்துக் கொள்வதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அசாம் காவல்துறை எங்களின் சொந்த முன்னுரிமையின்படி செயல்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்தியாவில் ஹுசைன் ஒபாமாக்கள் பலர் இருப்பதாக அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அசாம் முதல்வரின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல்வேறு எதிர்கட்சியினரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் சாகேத் கோகலே தனது ட்விட்டர் பதிவில், "இந்தியாவில் பாகுபாடு இல்லை என்று பிரதமர் மோடி கூறிய 24 மணி நேரத்திற்குள், அவரது கட்சியைச் சேர்ந்த முதல்வர், ஒபாமாவை 'ஹுசைன் ஒபாமா' என்று குறிப்பிடுகிறார். இந்தியாவில் இஸ்லாமியர்களை கவனித்துக் கொள்ள தனது மாநில காவல்துறையைப் பயன்படுத்துவதாக மறைமுகமாக அச்சுறுத்தல் விடுக்கிறார். இது சர்வதேச அரங்கில் பிரதமர் மோடியின் போலித்தனத்தை அம்பலப்படுத்துகிறது." எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் மோடியிடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர், இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு மோடி பதிலளிக்கும்போது, “சாதி, மதம், பாலினம் ஆகிய பாகுபாடுகளுக்கு இந்தியாவில் முற்றிலும் இடமில்லை” என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. கேள்வியெழுப்பிய பெண் பத்திரிகையாளரை பாஜக ஆதரவு ஐடிக்கள் சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.